திங்கள். ஆக 19th, 2019

24 நிமிடத்தில் மோட்சம்!

24 நிமிடத்தில் மோட்சம்!
24 நிமிடத்தில் மோட்சம்!

‘மோட்சம் கிடைக்க வேண்டுமானால்,

                      தவமிருங்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுங்கள், குறைந்த பட்சம், நாம ஜபமாவது செய்யுங்கள்…’

என்று சொல்கின்றனர், மகான்கள். ஆனால்,

வெறும், 24 நிமிடத்தில் மோட்சத்தை  - பிறப்பற்ற நிலையை எளிதில் பெற ஒரு வழி இருக்கிறது. 
வேலுார் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள கடிகாசல மலையிலுள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல வேண்டும். 
கடிகாசலம் என்று இந்த மலைக்கு பெயர் வரக் காரணம் உள்ளது… 
கடிகை என்றால் ஒரு நாழிகை அல்லது 24 நிமிடம். சலம் என்றால் மலை. ஆம்… 24 நிமிடம் இந்த மலையில் அமர்ந்திருந்தாலே போதும், நரசிம்மரின் அருளால் பாவங்கள் நீங்கி, மோட்ச பலனை அடையலாம்.
பிரகலாதனுக்கு, நரசிம்மராக காட்சி கொடுத்தார், பெருமாள். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய

வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள், கடிகை மலையில் தவமிருந்தனர். 
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது… 
விஸ்வாமித்திரர் இத்தலத்தில் ஒரு நாழிகை நேரம், நரசிம்மரை வழிபட்டதன் பயனாக, ‘பிரம்ம ரிஷி’ பட்டம் பெற்றார். அதே போல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் நிச்சயம் என, கருதினர். ஆனால், இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள் தொந்தரவு செய்தனர். தங்களை காக்க, பெருமாளை வேண்டினர், ரிஷிகள்.
ஆஞ்சநேயரை அழைத்து, ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார், பெருமாள். பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கி, அரக்கர்களை வென்று, ரிஷிகளை காப்பாற்றினார், ஆஞ்சநேயர். பின், ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது. 
அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார், பெருமாள். அவர்களது விருப்பப்படி, இத்தலத்தில் யோக நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார், பெருமாள்.
பெருமாள் கோவில்களில் மூலவரும், உற்சவரும் ஒரே சன்னிதியில் தான் இருப்பர். ஆனால், இங்கு மூலவர் யோக நரசிம்மர், 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் இருக்கிறார். இவரைத் தரிசிக்க, 1,305 படிகள் ஏற வேண்டும்.
மலை அடிவாரத்திலிருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள சோளிங்கரில், உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லிக்கு தனித்தனி கோவில் உள்ளது. திருவிழாக்கள் இந்தக் கோவிலில் தான் நடத்தப்படுகிறது.
கடிகை மலை எதிரிலுள்ள சிறிய மலையில், 406 படிகள் ஏறினால், யோக நிலையில் உள்ள ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். இவர், ஜப மாலை, சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். ‘சதுர் புஜ யோக ஆஞ்சநேயர்’ என்ற பெயர் கொண்ட இவரது கண்கள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை பார்த்தபடி உள்ளது. 
பெருமாளின், 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சம். 
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இத்தலத்தில் அன்னதானம் செய்தால், கயாவில் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
புதிதாக வீடு கட்டுபவர்கள், பணிகள் தடையின்றி நிறைவேற, சிறு கற்களை எடுத்து அடுக்கி வைக்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர். 

மலைக்கோவில், காலை 8:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரையிலும், கீழ் கோவில், காலை, 6:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.
வேலுார் – திருத்தணி சாலையில், 60 கி.மீ., துாரத்திலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக, 125 கி.மீ., துாரத்திலும் சோளிங்கர் உள்ளது. 

நன்றி-தி.செல்லப்பா.

தகவல் -கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்