வி. அக் 24th, 2019

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி…!

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி…!

கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு. 
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர். 
வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து விட்டனர். 
ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம். 
பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும், பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள் இருக்க முடியாது. ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின் நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப் பிடிக்கும். அது தான் திருத்தங்கல். 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில், நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள், மகாலட்சுமி. விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம் பெருகும்.
திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது. 

 

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது. வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.
பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமை மிக்கவள். இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர், மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர். ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை காக்கிறாள். இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.
நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான் பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே அதிகம்…’ என்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி, வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு வந்து தவம் புரிந்தாள். பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’ என, ஏற்று அருளினார். 
திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’ என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.
கோவில், தங்கால மலை மீது உள்ளது. பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால், ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார். செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் ஆகியோர் கருவறையில் உள்ளனர். 
சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது. மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி (பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற நான்கு தாயார்கள் உள்ளனர். நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.
விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது. 

நன்றி – திரு தி.செல்லப்பா.

தகவல் – கிராமத்தான் முயாஷா

பதிவு செய்த நாள்:

செவ்வாய் 16 அக்டோபர் 2018.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்