திங்கள். ஆக 19th, 2019

முல்லை பெரியாறில் புதிய அணை ஆய்வுக்கு அனுமதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழகம் முடிவு.

-முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் வகையில், அதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி கோரும், கேரள அரசின் மனுவை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்றுள்ளது. கடும் எதிர்ப்பை மீறி, இந்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாயும் முல்லை பெரியாறில், கேரள மாநிலம், இடுக்கியில், முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இதை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த அணையில், 142 அடி உயரத்துக்கு தண்ணீரை சேமித்து வைக்க, தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

கேரள எல்லைக்குள் இருந்தாலும், இந்த அணை, தமிழக அரசுக்கு சொந்தமானதாகவும், அதன் பராமரிப்பில் இருப்பதையும், கேரள அரசு விரும்பவில்லை. நீண்ட காலமாக, இந்த அணைக்கு எதிரான பிரசாரங்களில், கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் வரத்தை தடுக்கும் வகையில்,அருகில் புதிதாக மற்றொரு அணையை கட்டுவதற்கான முயற்சி யிலும், கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒப்புதல்

புதிய அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி யைப் பெறுவதற்கு முன், அந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.இந்த ஒப்புதலை பெறுவதற்கு முன், திட்டத்தின் சாத்தியக் கூறுகள், சுற்றுச்சூழல் நிலை குறித்த ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வு நடத்துவதற்கு அனுமதி கோரி, கேரளா சார்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத் தின் நிபுணர் ஆய்வுக் குழுவிடம் மனு அளிக்கப் பட்டது.

சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை காரணம் காட்டி, ‘புதிய அணை அமைக்கப்பட வேண்டும்’ என, கேரள அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு மேற்கொள்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்கத்தின் துணை அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது, தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.’இந்த ஆய்வுக்கான அனுமதியை நிறுத்த வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வலுவாக உள்ளது

இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கேரளாவின் இடுக்கியில் உள்ள, 123 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணை மிகவும் வலுவானதாக உள்ளதாகவும், 142 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க லாம் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. இந்நிலையில், புதிய அணை கட்டும் வகையில், அதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளாவுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த முடிவானது, உச்ச நீதிமன்றம், 2014ல் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு,முதல்வர் பழனிசாமி, நேற்று கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும், நதித் திட்டங்களுக்கான ஆய்வுக் கமிட்டி, கடந்த மாதம், 27ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில், தற்போதைய முல்லை பெரியாறு அணைக்கு
பதிலாக, புதிய அணை கட்ட, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளா அனுமதி கோரியது. ஆய்வு நடத்துவதற்கான விரிவான விதிகளை, சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின் ஆய்வு கமிட்டி வழங்க, முடிவு செய்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் இந்த நடவடிக்கை, தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் முடிவு, 2006 மற்றும் 2014 மே, 7ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானது.’புதிய அணை கட்டுவது தொடர்பான பிரச்னையில், தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே, கருத்து ஒற்றுமை அவசியம்.

கேரளாவின் திட்டத்தை, தமிழகம் மீது திணிக்கக் கூடாது’ என, நீதிமன்றம் தன் உத்தரவில் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக, மத்திய சுற்றுச்சூழல் துறையின் முடிவு அமைந்துள்ளது. கடந்த, 2015 ஜூன், 10ம் தேதி, அன்றைய முதல்வர், ஜெ., உங்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘புதிய அணை தொடர்பான, கேரள அரசின் விண்ணப்பங்களை, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஏற்கக் கூடாது; இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது’ என உத்தர விடும்படி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, கேரள அரசின் கோரிக்கையை, 2015 ஜூலையில், மத்திய அரசு நிராகரித்தது.

தற்போது, உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, முல்லை பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்ட அளித்துள்ள, அனுமதியை திரும்பப் பெற, வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்