வி. ஆக 22nd, 2019

தொண்டு செய்வதே மகிழ்ச்சி அளிக்கிறது – பண்டிகை நாட்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நெகிழ்ச்சி

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், ஆயுதபுஜை, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சேவை நோக்கத்தோடு, அரசுத்துறைகளின் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரை பிரிந்து பணிபுரிந்து பொது மக்களுக்கு சேவை புரிகின்றனர். அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அதன் விபரம்:

மக்கள் நலனே உயிர்மூச்சு எஸ்.சுரேஷ், தீயணைப்பு வீரர், தேனி:

”பணியில் சேர்ந்த பதினேழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கொடைக்கானலில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்தேன். திண்டுக்கல், தேனி என இரண்டு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். உயிர்காக்கும் பணி ஆபத்தானது என்றாலும், ஆபத்தான, பேரிடர் காலங்களிலும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் விடுமுறை எடுத்தது கிடையாது. பயிற்சி காலங்களில் பொதுமக்கள் நலனே உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதனால் மக்கள் நலனே உயிர் மூச்சு என பணி செய்வது சந்தோஷமாக உள்ளது. எனது குடும்பத்தினர் இந்த சேவைப் பணியை புரிந்து கொண்டு வழிநடத்துவதும், வழிநடப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.”, என்றார்.

கவலை மறந்து போகும்- எஸ்.அழகுமணி, சில்வார்பட்டி கண்டக்டர், தேனி பணிமனை:

”தீபாவளி என்றாலே இல்லத்தில் கொண்டாட்டம் தான். குழந்தைகள் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், நாங்கள் அவ்வாறு விழா காலங்களில் வீடுகளில் இருந்து கொண்டாட முடியாது. மனதுக்கு வேதனையாகத்தான் இருக்கும்.ஆனால், பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலைய பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். இருந்த போதிலும் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று நினைக்கும் போது கவலை, கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போகும்.”, என்றார்.

சேவையில் மனநிறைவு – டாக்டர் டி.ஜான்ஸிராணி, அரசு மருத்துவமனை, பெரியகுளம்:

”மருத்துவ சேவையையும், மருத்துவர்களையும் ஆண்டவனுக்கு நிகராக மக்கள் மதிக்கின்றனர். அதனால் தீபாவளியன்று பணி செய்வதற்கு அதிக விருப்பம். தீபாவளியன்று அவசர வார்டில் 24 மணி நேரம் பணியில் உள்ளேன். நேற்று வெளி நோயாளியாக 300 பேர் சிகிச்சை பெற்று சென்றனர். பட்டாசு வெடித்து விரலை காயப்படுத்திய ஆதீஸ்வரன், 13 உட்பட 5 பேருக்கு தீக்காயம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 55 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். பண்டிகை நாள் பார்த்து நோய் வருவதில்லை, மருத்துவம் என்பது அவசர காலபணி ஒவ்வொரு நிமிடமும் நோயாளிக்கு முக்கியத்துவமானது. நோயாளிகள் எங்களை இறைவனாக பார்க்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக, உண்மையாக அதேநேரத்தில் அவர்களை காப்பாற்ற முழுமுயற்சி செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்களின் நோக்கம். அதுதான் மனதிற்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது. எப்போதுமே பணி முடிந்த பின், தீபாவளி கொண்டாடுவதுதான் என் வழக்கம்.”, என்றார்.

கடவுளின் பாக்கியம் – ஏ.ராஜலிங்கம்: (சப்- இன்ஸ்பெக்டர், போடி) :

காவல்துறைப் பணியில் சேவை நோக்கு அதிகரித்து இருக்க வேண்டும். தீபாவளி நேரங்களில் குடும்பத்தோடு வீட்டில் கொண்டாடாமல் இருப்பது வருத்தம் அளிக்கும்.பழகிப் போன விசயமாக இருந்தாலும், சீருடை அணிந்து விட்டால் எந்த நினைவுகளும் வருவதில்லை. எப்போதும் போல ‘டூயூட்டி’ பார்ப்பது போல மட்டற்ற மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.திருவிழா என்றாலே போக்குவரத்து, மக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கும். இந்த நேரங்களில்மக்கள் சந்தோசமாக இருக்கவும், பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும் பொருட்டும், வீட்டை விட்டு வெளியேறும் போது மக்களுக்காக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைப்படுகிறேன். இன்று ஒரு நாள் கஷ்டங்களை மறந்து பொதுமக்களில் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி சந்தோசப்படுவோரின் முகங்களை பார்க்கும் போது, அளப்பரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது.”, என்றார்.

தொண்டு செய்வது மகிழ்ச்சியே எம். அனுசுயா, நர்ஸ், கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:

”தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என, அரசு விடுமுறை நாட்களில் பணிகள் செய்வது மகிழ்ச்சி. உயிர்காக்கும் அவசர சிகிச்சையில் பணி புரிவது மிகப்பெரிய தொண்டு செய்வது போன்றது. இத்தீப திருநாளை சந்தோசமாக அனைவரும் கொண்டாடினாலும், பல எதிர்பாராவிதமாக ஏற்படும் சம்பவங்களை தடுக்க முடியாது. தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில், காலையில் இருந்து மதியம் வரை 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்துள்ளனர். மற்ற அனைத்து இடங்களிலும் விடுமுறை காரணமாக சிகிச்சை பெற முடியாத நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் காய்ச்சலால்சிரமம் அடைந்திருந்தாலும் மிகுந்த சந்தோசமுடன் வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட அரசு விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபட்டுள்ளேன். விடுமுறை நாட்களில் பணியாற்றுவதில் ஏற்படும் முக்கியத்துவம் குறித்து பயிற்சி பெற்றது, உதவியாக இருக்கிறது.”, என்றார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்