வி. ஆக 22nd, 2019

குண்டு குழந்தை – தவறான உணவால் அதிகரிப்பு: பெற்றோருக்கு ‘ரெட் அலர்ட்’.

வினோதினி எவ்வளவு சாப்பிட்டாலும் ‘சத்து வைப்பதில்லை’ என்பதுதான், சமீபகாலமாக தாய் கார்த்திகாவை வாட்டியெடுக்கும் முக்கிய கவலை. நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குள், எப்படியும் அவளை ‘கொழுக் மொழுக்’ ஆக மாற்றி விட வேண்டுமென்பதுதான் உடனடி இலக்கு. கார்த்திகாவைப் போல் பல அம்மாக்களின் கவலையும், குழந்தை பார்க்க புஷ்டியாக இருக்க வேண்டுமென்பதுதான்.

ஆனால், ஆரோக்கியத்துக்கும் உடல் எடைக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக்கொள்ளும் டாக்டர்கள், மற்றொரு அதிர்ச்சி தகவலையும் கூறுகின்றனர். அது…அதிக உடல் பருமனுள்ள குழந்தைகள் பட்டியலில், தமிழகம் வெகு விரைவில் முன்னிலை பெற போகிறது என்பதுதான்.’போதும்மா’ என்று குழந்தைகள் சொன்னாலும், உணவை திணிப்பதில்தான் அம்மாக்களின் முழு கவனமும் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு, புத்தகப்பையை விஞ்சிவிடும் அளவு, மதிய உணவு கொடுத்தனுப்புகின்றனர். இடைவேளை விடாமல் சாப்பிடும் அளவுக்கு, விளையாட அனுப்புவதில்லை. இதுவே, எடை அதிகரிக்க காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சர்க்கரை நோய்க்கு அழைப்பு

‘பள்ளி விட்டால் வீடு; மீண்டும் பள்ளி’ என 24 மணி நேரத்தையும் நான்கு சுவர்களுக்குள் குழந்தைகள் கழிக்கின்றனர். இதுதான் எடை அதிகரிக்க காரணம். இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் மேற்கொண்ட ஆய்வில், ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட நகர்ப்புற குழந்தைகளில், 29 சதவீதம் பேர், அதிக எடையுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக உடல் எடை காரணமாக, 100ல், ஆறு குழந்தைகள் சர்க்கரை வியாதிக்கு ஆளாவது அதிர்ச்சிக்குரிய தகவல்.

எடை அதிகரிக்க காரணம்

குழந்தைகளின் எடையை கூட்டுவதில், உப்பு சுவையுள்ள நொறுக்கு தீனிக்குதான் முக்கிய பங்கு. அதிக கலோரிகள் கொண்ட இந்த பாக்கெட் ஸ்னாக்ஸ், மென்மேலும் சாப்பிடும் உணர்வை துாண்டுகிறது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை, குழந்தைகள் விரும்ப இதுவே காரணம்.’டிவி’, மொபைல் போன்களில் ஆழ்ந்தபடி சாப்பிடுவோர், தேவையை விட அதிக உணவு உட்கொள்கின்றனர். அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோயில் துவங்கி, இதய நோய்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கும்.ஆகவே, பெற்றோரே… குழந்தைகள் சுறுசுறுப்பாக, உயரத்துக்கு ஏற்ற எடையுடன் உள்ளனரா… கவலையை விடுங்க!

பாரதியை மறக்காதீங்க!

‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்ற பாரதி வரிகளை பின்பற்றினாலே போதும். மண்ணில் விளையாடினால், கிருமிகள் தொற்றி விடும் என நினைத்து, விளையாட அனுமதிக்காததால், ஏராளமான நோய்களுக்கு, உடல் சிவப்பு கம்பளம் விரித்துவிடுகிறது. பசித்தால் சாப்பிடு என குழந்தைகளை பழக்கினாலே போதும். பசி எடுக்காத போது சாப்பிடும் உணவு விஷம் தான். அதிக எடை, கவனச்சிதறலுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
– சதீஷ்குமார்,
ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம்.

பாக்கெட் உணவை பக்கத்தில் விடாதீங்க!

* குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், எடைக்கும் சம்பந்தமே இல்லை. வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிட கொடுப்பது தான் சிறந்தது. கால்சியம் வேண்டுமென, பலர் அளவுக்கு அதிகமாக பால் கொடுக்கின்றனர். பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட கொடுப்பதால், குடல் சார்ந்த நோய்கள் வரலாம்.
*பாக்கெட் உணவுகளும், எடை அதிகரிக்க காரணம். ஒரு டம்ளர் பால், இரண்டு பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு, நாள் முழுக்க பசியே எடுக்காது. சாப்பிட அடம் பிடிப்பதற்கு, இதுதான் காரணம்.
* மொபைல்போன் பார்த்தபடி சாப்பிடுவதால், உணவை அரைக்காமல் விழுங்குவர்.
இது, செரிமான பிரச்னைக்கும் காரணமாகிவிடும். உயரத்துக்கேற்ற எடையோடு, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, சிறப்பு கவனிப்பு தேவையில்லை.

– தர்மேந்தர், குழந்தைகள் நல மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை.

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது

உயரத்துக்கு ஏற்ற எடைதான் சரியான அளவீடு. அதிக உணவால், 27 சதவீத குழந்தைகளுக்கு, எடை மட்டுமே கூடுகிறது. இதிலும், 14-18 வயதுக்கு உட்பட்டோரில், 41 சதவீதம் பேர், அதிக உடல் எடையால் அவதிப் படுகின்றனர் என, உலக சுகாதார ஆய்வு நிறுவன புள்ளி விபரம் கூறுகிறது.

நகர்ப்புறத்திலே ‘டாப்’

* நகர்ப்புறத்தில் வசிக்கும் குழந்தைகள் 100 பேரில், 36 பேர் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

*கிராமம், புறநகர் பகுதிகளில் இது, 25 சதவீதமாக உள்ளது.

*41.2 சதவீத குழந்தைகள், விளையாடுவதே இல்லை.

*அளவுக்கு அதிகமான எடையால், 22 சதவீத குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.

* ஐந்து வயதுக்குட்பட்ட, 27 சதவீத குழந்தைகள், உயரத்தை விட குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர்.

* 23 சதவீதம் பேர், உயரத்தை விட, அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

ஆதாரம்: இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல்.

மனஅழுத்தமும் காரணம்

குழந்தைகளின் உடல் பருமனுக்கு, உணவு பழக்கவழக்கத்தை தாண்டி, மன அழுத்தமும் முக்கிய காரணமாக உள்ளதாக, கோவை ஜெம் மருத்துவமனை டாக்டர் பிரவீன்ராஜ் தெரிவித்தார்.டாக்டர் பிரவீன்ராஜ் கூறியதாவது:தமிழகத்தில் 35 சதவீத பெண்களும், 30 சதவீதம் ஆண்களும், அதிக உடல் பருமனை கொண்டுள்ளனர். 19 சதவீத குழந்தைகளுக்கு, உயரத்துக்கு ஏற்ற எடை இல்லை. உடல் பருமனுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 0.1 சதவீதமாகவே உள்ளது.
உடல் பருமனுள்ள குழந்தைகளை ஆரோக்கியமானவர்கள் என கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு.மரபு வழி, உணவு பழக்கவழக்கத்தை தாண்டி, இன்றைய குழந்தைகள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதும், உடல் பருமனுக்கு முக்கிய காரணம். இதன் பின்விளைவுகள், உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமானது. உடல் பருமனுக்கான சிகிச்சை முறை, அவரவர் செரிமான தன்மை, ஹார்மோன் செயல்பாட்டை பொருத்து மாறுவதால், ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவதே சிறந்தது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.
நன்றி: http://www.dinamalar.com/news_detail.asp?id=2163555

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்