ஞாயிறு. செப் 22nd, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ஆறு ஆண்டுகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள, 2.15 லட்சம் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், பேசி தீர்க்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உள்துறை செயலர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, சசிகுமார் என்பவருக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், மரணம் அடைந்ததாக, அவரது சகோதரர் புகார் கூறினார். ஊத்துக்குளி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். சசிகுமார் குடும்பத்துக்கு, 3.94 லட்சம் ரூபாய் வழங்க, தனியார் நிறுவனத்துக்கு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. நீதிபதி, எம்.வி.முரளிதரன் முன், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் பதிவு செய்த வழக்கின் நிலை பற்றி, கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அவினாசி நீதிமன்றம், வழக்கை முடித்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், 2009 முதல், 2014 வரை, முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை என்ற விபரங்களை, தாக்கல் செய்யும்படி, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு, நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் ஜெனரல் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஆறு ஆண்டுகளில், 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிகபட்சமாக,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 28 ஆயிரத்து, 573 வழக்குகளும்,
மதுரை மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 351 வழக்குகளும்
முடித்து வைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக,
நீலகிரி மாவட்டத்தில், 193 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அறிக்கையை பார்த்த நீதிபதி முரளிதரன், அதிர்ச்சி அடைந்தார்.

‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின், விசாரணை நடத்தாமல், போலீசார் துாங்கி விட்டனரா; குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டனரா’ என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.’ஆறு ஆண்டுகளில், இத்தனை வழக்குகள் என்றால், 2000ம் ஆண்டில் இருந்து கணக்கு எடுத்தால், 10 லட்சம் வழக்காவது முடிக்கப்பட்டிருக்கும்’ என்றும் தெரிவித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ”இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலங்களில் தவிர்க்க, தனி குழு அமைத்து, விசாரிக்கப்பட வேண்டும். போலீசுக்கு மட்டும் அல்லாமல், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் வழிமுறைகள் அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் பரிந்துரைகள் அளிக்கும்படி, நீதிபதி அறிவுறுத்தினார். பின், இவ்வழக்கில், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யை சேர்த்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்