வி. அக் 24th, 2019

கலை

Arts – கலை

மயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள்

மயிலாடுதுறை அக் 26: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் சார்பில் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நூறு பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர்,17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் செயல்பட்டனர்.

இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

– நன்றி Mayiladuthurai News

இனியவை கூறல்!!!

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!”

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’

இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது_ஒரு_கலை.

நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி_நிச்சயம்.

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்…

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.

படித்ததில் ரசித்தது

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி

மயிலாடுதுறை அக் 21: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா நாகை மாவட்டம் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி தியாகி.G.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி முதல் கல்லூரி வரை மாணவ மாணவிகள் வயது அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 10 பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். 

மாஸ்டர் ரவிச்சந்திரன் முன்னிலை நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணா திராவிட கழக அவைத்தலைவர் P.N.ரத்தினகுமார், மாவட்ட செயலாளர் சுதாகர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

– நன்றி Mayiladuthurai News

 

 

முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார்

மயிலாடுதுறை அக்.21: முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார் அவர்களுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் சார்பில் அரிமா சங்க தலைவர், ஜெனிபர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பவுல்ராஜ் அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை, யூனியன் கிளப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மட்டுமில்லாமல் கடலூர், ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் முகநூல் நண்பர்கள் வந்து கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். மயிலாடுதுறையை சேர்ந்த ஒருவர் முகநூலில் எழுதிய கவிதைக்காக வெளியூரிலிருந்தெல்லாம் முகநூல் நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதே அவரது கவிதையின் சொல் வன்மைக்கு சான்றாக அமைந்தது.

கவிஞர் பூவை சாரதி அவர்கள் கவிஞர் இரா.சிவக்குமார் அவர்களை வாழ்த்தி தான் எழுதிய “கதிரவன் காலையில் எழுந்திடுமே” என்ற பாடலை பாடினார். இந்த விழாவில் பல கவிஞர்கள், எழுத்தாளர், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். வாழ்த்தி பேசிய பலர் இவர் எழுதிய கவிதைகளை விரைவில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சிறப்புரையாற்றிய திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் அவர்கள், கவிஞர்கள் இனி காதலையும் காமத்தையும் தவிர்த்து விட்டு மகாகவி பாரதியைப் போல் சமூக சிந்தனையோடு எழுத வேண்டும் என வலியுறுத்தினார்.இறுதியாக கவிஞர் இரா.சிவக்குமார் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரப்பாண்டியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் கலந்து கொண்டனர். பத்திரிகை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்

– நன்றி Mayiladuthurai News

பரியேறும் பெருமாள்: திருந்துங்கடா டீ வாங்கி தாரேன்

பரியேறும் பெருமாள்‘ படம் மூலமா தோழர் மாரி செல்வராஜ் இந்த சமூகத்துக்கு சொல்ல வரது என்னனா, “திருந்துங்கடா டீ வாங்கி தாரேன்”.

ரெண்டு மாசம் முன்னாடி ஒரு பறையிசை வரலாறு பத்தின நிகழ்வுல ஒரு விசயம் கேள்வி பட்டேன். அதாவது ஊரு சேரினு பிரிஞ்சு இருக்குற நம்ம கிராமங்கள்ல சேரில இருக்குறவங்க ஆண் நாய்கள வளர்க்க கூடாது. அப்டி ஏதாச்சும் ஆண் குட்டி பொறந்தா, அத அறுத்து போட்டுடனும். எங்க அந்த சேரில பொறந்த ஆண் நாய் ஊருல இருக்குற பெண் நாய்களோட சேந்துடுமோனு பயமாம். பிறப்பால் இங்க ஏற்ற தாழ்வு மனுசங்கள்ல மட்டும் பாக்கல அது மிருகங்கள் வரைக்கும் பாக்குறாங்கனு தெரிஞ்ச போது லைட்டா தொண்ட கவ்வுச்சு.

பரியேறும் பெருமாள் படத்துல இன்னும் இந்த ஏற்ற தாழ்வு வேற எங்க எங்கெல்லாம் தன்னோட வேலைய காட்டுதுனு சொல்லி இருக்கு. படம் பாக்கும் போது ஒரு நாலு அஞ்சு தடவ எனக்கு தொண்ட கவ்வுச்சு. நாம வெறும் முக்கியமான மாவட்ட செய்திகளா கடந்து போற ஒவ்வொரு சம்பவத்துக்கு பின்னாடியும் இருக்குற வலி வேதனை மூடத்தனம்னு எல்லாத்தையும் தெளிவு படுத்தியிருப்பாரு தோழர் மாரி.

வாழ்க்கைல ஒடுக்குமுறைய அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் ஒன்னொருத்தர் ஒடுக்கப்படும் போது அவங்க நிலைமை ஒடனே புரியும். இது வரைக்கும் எப்போவுமே உங்களக்கு வாழைப்பழம் வாயில ஊட்ட பட்டு இருந்தா, ஒன்னு உங்களுக்கு ஒடுக்கப்படுறவங்க நிலைமை புரிய லேட் ஆகும் இல்லாட்டி புரியவே புரியாது. இந்த லேட்டா புரியுற ஆளுங்களுக்கு பரியனோட பயணம் தன்னோட பயணமா உணர வெச்சு இருப்பாரு தோழர் மாரி. பல பேரால ஈசியா கேக்குற கேள்விகள ஏன் பரியனாள கேக்கவே முடியறது இல்லனு உங்களுக்கு புரியும். அந்த என்ன சொன்னாலும் புரியவே புரியாத ஆளுங்க மூஞ்சில, கடைசில காரி துப்பி இருக்கும் இந்த படம்.

இசை, பாடல் வரிகள், வசனம், நடிப்பு, யோகி பாபுவோட போற போக்குல பொசுக்குன்னு போடுற காமெடி எல்லாமே இந்த பரியனோட பயணத்த நமக்கு அழகா காட்டிருக்கு. கறுப்பி அண்ட் நான் யார் பாடல்கள் கண்டிப்பா எல்லாரையும் பாதிக்கும். திருநெல்வேலி படம்னாலே வெறும் ‘வாலே போலெ’ வெச்சு ஒப்பேத்துற படங்களுக்கு மத்தியில அந்த மாவட்டத்து மக்களோட வாழ்க்கையை ரெண்டரை மணி நேர கேண்டிட் ஷூட் மாதிரி அழகாவும் நேர்த்தியாவும் இந்த படம் காட்டிருக்கு.

ப. ரஞ்சித் அவரோட முதல் தயாரிப்பு, ராம் அவர்களோட அசிஸ்டன்ட் டைரக்டர் மாரி செல்வராஜ். இந்த ரெண்டு விசயமும் படம் பாக்குறதுக்கு முன்னாடியே ஒரு எதிர்பார்ப்ப ஏற்படுத்துச்சு. அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட மிஸ் ஆகல. படத்துல இத இப்டி பண்ணி இருக்கலாம் அந்த எடத்துல அத பண்ணியிருக்கலாம் அப்டி இப்டினு ஆயிரம் விமர்சனம் கண்டிப்பா வரும். தமிழ் சினிமால மிகவும் பேசப்பட்ட படங்கள்ல இதுவும் ஒரு படமா கண்டிப்பா இருக்கும். People won’t be able to ignore this movie.

இந்த படம் பாக்குற எல்லார்க்கும் ஒடுக்கப்படுறவங்க நிலைமை கண்டிப்பா கொஞ்சமாச்சும் புரியும். இத இங்கிலிஷ்ல Empathy_னு சொல்வாங்க. இந்த படத்த பாத்த பிறகும் கூட அந்த Empathy வராம ‘இப்போல்லாம் யாரு சார் இதெல்லாம் பாக்குறா’ அப்டினு சொல்றவங்களுக்கு தோழர் மாரி சொல்ற ஒரே மெசேஜ் ‘திருந்துங்க டா டீ வாங்கி தாரேன்’. படத்த முழுசா பாருங்க திருந்துங்க.

P.S. இந்த படம் ‘அந்த’ விசயத்த பத்தினது தான். ஆனா என் பதிவுல ஒரு வாட்டி கூட நா ‘அந்த’ வார்த்தைய யூஸ் பண்ணல. படத்துலயும் அப்டி தான். அந்த வார்த்தை உங்க காதுல விழாது

– Siva Raman S

உயர்வில் பணிவு!!!

அமிதாப் பச்சன்:

எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை, பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார்.

வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.

என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. விளையாட்டு என்னை கண்டு கொள்ளவும் இல்லை.

ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.

என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?

அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொருத்து கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.

அந்த மனிதரும் புன்னகை செய்து, ‘ஹலோ’ என்று சொன்னார்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம்,
அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.

அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.

சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.

நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.

அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,

உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.  நல்லது,
என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன். அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே, உங்களை சந்தித்த இந்த நாள், நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:

என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.

நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.

பேரையும், புகழையும் வைத்து, நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நம்மை விட வசதியிலும், அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.

நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.

வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும், எல்லா இடத்திலும் வென்றுள்ளது.

எந்த சூழ்நிலையிலும், பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.

அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்