செவ். பிப் 19th, 2019

செய்தி

News – செய்திகள்

சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம்.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…!

கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”

தலைப்பு :
————-
சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம்.
———————————————————————————————————-

கீரை : வல்லாரை காபி
————————-

தேவையான பொருட்கள்
————————-

வல்லாரைக் கீரை (நிழலில் உலர்த்தியது) – கால் கிலோ
மிளகு – 25 கிராம்
சுக்கு – 25 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
தனியா – 100 கிராம்

செய்முறை
————

உலரவைத்த கீரையுடன் மேற்கூறிய பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனை தினமும் 2 ஸ்பூன் அளவு எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. மேலும் சர்க்கரை நோய் , தூக்கமின்மை மற்றும் மனம்சார்ந்த குறைபாட்டால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக பயன்படும்.

இரவு படுக்கப் போகும் முன்
——————————

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வெள்ளி 15 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் – கிராமத்தான் முயாஷா.

33வது மாவட்டமாக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி உதயமாகிறது

தமிழகத்தின், 33வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி உதயமாகிறது. பத்துக்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளுடன், விழுப்புரம் மாவட்டம், பெரிதாக இருப்பதால், நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் காரணமாக, விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தலைமையில், தனி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

ஒருங்கிணைந்த கடலுார் மாவட்டத்திலிருந்து, 1993 செப்., 30ல், விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின், மையப் பகுதியில், விழுப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது. இது, நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டம். மொத்தம், 7,194 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. இம்மாவட்டத்தில், விழுப்புரம், வானுார், திண்டிவனம், மயிலம், செஞ்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் என, 11 சட்டசபை தொகுதிகள்; விழுப்புரம், கள்ளக்குறிச்சி என, இரண்டு லோக்சபா, தொகுதிகள் உள்ளன.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, 34.58 லட்சம். மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான, விழுப்புரம் மாவட்டத்தில், 13 தாலுகாக்கள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், மூன்று நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 1,099 ஊராட்சிகள், நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மக்கள், அதன் தலைநகரமான, விழுப்புரம் வந்து செல்ல, பெரிதும் சிரமப்பட்டனர்.

எனவே, ‘விழுப்புரம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்’ என, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

அப்போது, புதிய மாவட்ட அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

முதல்வர் கூறியதாவது: சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம்; உளுந்துார்பேட்டை, எம்.எல்.ஏ., குமரகுரு ஆகியோர், விழுப்புரம், பெரிய மாவட்டமாக உள்ளதால், அதை பிரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதாக, என்னிடம் தெரிவித்தனர். அதை பரிசீலித்து, விழுப்புரம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அதை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிய மாவட்டத்திற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களிடம், பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. புதிதாக, 33வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி உதயமாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ஆறு ஆண்டுகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள, 2.15 லட்சம் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், பேசி தீர்க்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உள்துறை செயலர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, சசிகுமார் என்பவருக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், மரணம் அடைந்ததாக, அவரது சகோதரர் புகார் கூறினார். ஊத்துக்குளி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். சசிகுமார் குடும்பத்துக்கு, 3.94 லட்சம் ரூபாய் வழங்க, தனியார் நிறுவனத்துக்கு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. நீதிபதி, எம்.வி.முரளிதரன் முன், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் பதிவு செய்த வழக்கின் நிலை பற்றி, கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அவினாசி நீதிமன்றம், வழக்கை முடித்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், 2009 முதல், 2014 வரை, முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை என்ற விபரங்களை, தாக்கல் செய்யும்படி, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு, நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் ஜெனரல் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஆறு ஆண்டுகளில், 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிகபட்சமாக,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 28 ஆயிரத்து, 573 வழக்குகளும்,
மதுரை மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 351 வழக்குகளும்
முடித்து வைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக,
நீலகிரி மாவட்டத்தில், 193 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அறிக்கையை பார்த்த நீதிபதி முரளிதரன், அதிர்ச்சி அடைந்தார்.

‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின், விசாரணை நடத்தாமல், போலீசார் துாங்கி விட்டனரா; குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டனரா’ என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.’ஆறு ஆண்டுகளில், இத்தனை வழக்குகள் என்றால், 2000ம் ஆண்டில் இருந்து கணக்கு எடுத்தால், 10 லட்சம் வழக்காவது முடிக்கப்பட்டிருக்கும்’ என்றும் தெரிவித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ”இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலங்களில் தவிர்க்க, தனி குழு அமைத்து, விசாரிக்கப்பட வேண்டும். போலீசுக்கு மட்டும் அல்லாமல், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் வழிமுறைகள் அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் பரிந்துரைகள் அளிக்கும்படி, நீதிபதி அறிவுறுத்தினார். பின், இவ்வழக்கில், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யை சேர்த்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

புதுமண தம்பதிக்கு கழிப்பறை சாதனம் பரிசு…!

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில், ‘ஜெய்ஸ்வால் சமாஜ்’ அமைப்பு சார்பில் நடந்த, இலவச திருமண நிகழ்ச்சியில், தம்பதிக்கு, கழிப்பறை சாதனம் பரிசாக வழங்கப்பட்டது.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரயாக்ராஜில், ஜெய்ஸ்வால் சமாஜ் என்ற அமைப்பு சார்பில், ௧௮ ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.இதையொட்டி, மணப்பந்தலுக்கு, திருமண ஜோடிகள், குதிரைகளில், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். திருமணத்துக்கு பின், தம்பதியருக்கு, ஜெய்ஸ்வால் சமாஜ் சார்பில், கழிப்பறை சாதனமும், மரக்கன்றும், பரிசாக வழங்கப்பட்டன.வழக்கமாக, பீரோ, தையல் மிஷின், பாத்திரங்கள் போன்றவை தான் பரிசாக வழங்கப்படும். ஆனால், முதல் முறையாக, கழிப்பறை சாதனம் பரிசாக வழங்கப்பட்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இது பற்றி, ஜெய்ஸ்வால் சமாஜின் தலைவர், டி.என்.ஜெய்ஸ்வால் கூறியதாவது:மத்திய அரசின், ‘துாய்மை இந்தியா’ திட்டம், எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால், வழக்கமாக தரும் பரிசு பொருட்களுக்கு பதிலாக, கழிப்பறை சாதனத்தை பரிசாக அளித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:- http://www.dinamalar.com/news_detail.asp?id=2171783

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் நீராடினர்.

குத்தாலத்தில், நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உக்தவேதீஸ்வரர், காளீஸ்வரர், சோழீஸ்வரர், மன்மதீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் மங்கள வாதியங்கள் முழங்க, வீதி உலா வந்து, காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.அங்கு, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வித்துன்மாலி என்ற அரக்கன், சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளிபடைத்த கிரகமாக மாறியதால், சூரியனால், பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது.
இதையடுத்து, சூரிய பகவான் குத்தாலத்தில் தவம் இருந்து, சிவபெருமான் அருள் பெற்றார் என்பதன் ஐதீகமாக, கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

குண்டு குழந்தை – தவறான உணவால் அதிகரிப்பு: பெற்றோருக்கு ‘ரெட் அலர்ட்’.

வினோதினி எவ்வளவு சாப்பிட்டாலும் ‘சத்து வைப்பதில்லை’ என்பதுதான், சமீபகாலமாக தாய் கார்த்திகாவை வாட்டியெடுக்கும் முக்கிய கவலை. நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குள், எப்படியும் அவளை ‘கொழுக் மொழுக்’ ஆக மாற்றி விட வேண்டுமென்பதுதான் உடனடி இலக்கு. கார்த்திகாவைப் போல் பல அம்மாக்களின் கவலையும், குழந்தை பார்க்க புஷ்டியாக இருக்க வேண்டுமென்பதுதான்.

ஆனால், ஆரோக்கியத்துக்கும் உடல் எடைக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக்கொள்ளும் டாக்டர்கள், மற்றொரு அதிர்ச்சி தகவலையும் கூறுகின்றனர். அது…அதிக உடல் பருமனுள்ள குழந்தைகள் பட்டியலில், தமிழகம் வெகு விரைவில் முன்னிலை பெற போகிறது என்பதுதான்.’போதும்மா’ என்று குழந்தைகள் சொன்னாலும், உணவை திணிப்பதில்தான் அம்மாக்களின் முழு கவனமும் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு, புத்தகப்பையை விஞ்சிவிடும் அளவு, மதிய உணவு கொடுத்தனுப்புகின்றனர். இடைவேளை விடாமல் சாப்பிடும் அளவுக்கு, விளையாட அனுப்புவதில்லை. இதுவே, எடை அதிகரிக்க காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சர்க்கரை நோய்க்கு அழைப்பு

‘பள்ளி விட்டால் வீடு; மீண்டும் பள்ளி’ என 24 மணி நேரத்தையும் நான்கு சுவர்களுக்குள் குழந்தைகள் கழிக்கின்றனர். இதுதான் எடை அதிகரிக்க காரணம். இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் மேற்கொண்ட ஆய்வில், ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட நகர்ப்புற குழந்தைகளில், 29 சதவீதம் பேர், அதிக எடையுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக உடல் எடை காரணமாக, 100ல், ஆறு குழந்தைகள் சர்க்கரை வியாதிக்கு ஆளாவது அதிர்ச்சிக்குரிய தகவல்.

எடை அதிகரிக்க காரணம்

குழந்தைகளின் எடையை கூட்டுவதில், உப்பு சுவையுள்ள நொறுக்கு தீனிக்குதான் முக்கிய பங்கு. அதிக கலோரிகள் கொண்ட இந்த பாக்கெட் ஸ்னாக்ஸ், மென்மேலும் சாப்பிடும் உணர்வை துாண்டுகிறது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை, குழந்தைகள் விரும்ப இதுவே காரணம்.’டிவி’, மொபைல் போன்களில் ஆழ்ந்தபடி சாப்பிடுவோர், தேவையை விட அதிக உணவு உட்கொள்கின்றனர். அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோயில் துவங்கி, இதய நோய்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கும்.ஆகவே, பெற்றோரே… குழந்தைகள் சுறுசுறுப்பாக, உயரத்துக்கு ஏற்ற எடையுடன் உள்ளனரா… கவலையை விடுங்க!

பாரதியை மறக்காதீங்க!

‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்ற பாரதி வரிகளை பின்பற்றினாலே போதும். மண்ணில் விளையாடினால், கிருமிகள் தொற்றி விடும் என நினைத்து, விளையாட அனுமதிக்காததால், ஏராளமான நோய்களுக்கு, உடல் சிவப்பு கம்பளம் விரித்துவிடுகிறது. பசித்தால் சாப்பிடு என குழந்தைகளை பழக்கினாலே போதும். பசி எடுக்காத போது சாப்பிடும் உணவு விஷம் தான். அதிக எடை, கவனச்சிதறலுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
– சதீஷ்குமார்,
ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம்.

பாக்கெட் உணவை பக்கத்தில் விடாதீங்க!

* குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், எடைக்கும் சம்பந்தமே இல்லை. வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிட கொடுப்பது தான் சிறந்தது. கால்சியம் வேண்டுமென, பலர் அளவுக்கு அதிகமாக பால் கொடுக்கின்றனர். பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட கொடுப்பதால், குடல் சார்ந்த நோய்கள் வரலாம்.
*பாக்கெட் உணவுகளும், எடை அதிகரிக்க காரணம். ஒரு டம்ளர் பால், இரண்டு பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு, நாள் முழுக்க பசியே எடுக்காது. சாப்பிட அடம் பிடிப்பதற்கு, இதுதான் காரணம்.
* மொபைல்போன் பார்த்தபடி சாப்பிடுவதால், உணவை அரைக்காமல் விழுங்குவர்.
இது, செரிமான பிரச்னைக்கும் காரணமாகிவிடும். உயரத்துக்கேற்ற எடையோடு, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, சிறப்பு கவனிப்பு தேவையில்லை.

– தர்மேந்தர், குழந்தைகள் நல மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை.

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது

உயரத்துக்கு ஏற்ற எடைதான் சரியான அளவீடு. அதிக உணவால், 27 சதவீத குழந்தைகளுக்கு, எடை மட்டுமே கூடுகிறது. இதிலும், 14-18 வயதுக்கு உட்பட்டோரில், 41 சதவீதம் பேர், அதிக உடல் எடையால் அவதிப் படுகின்றனர் என, உலக சுகாதார ஆய்வு நிறுவன புள்ளி விபரம் கூறுகிறது.

நகர்ப்புறத்திலே ‘டாப்’

* நகர்ப்புறத்தில் வசிக்கும் குழந்தைகள் 100 பேரில், 36 பேர் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

*கிராமம், புறநகர் பகுதிகளில் இது, 25 சதவீதமாக உள்ளது.

*41.2 சதவீத குழந்தைகள், விளையாடுவதே இல்லை.

*அளவுக்கு அதிகமான எடையால், 22 சதவீத குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.

* ஐந்து வயதுக்குட்பட்ட, 27 சதவீத குழந்தைகள், உயரத்தை விட குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர்.

* 23 சதவீதம் பேர், உயரத்தை விட, அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

ஆதாரம்: இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல்.

மனஅழுத்தமும் காரணம் (மேலும்…)

வறுமையிலும் செம்மை…! உணவு வழங்கும் வாலிபர்.

வறுமையான சூழலிலும், ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை, வாலிபர் வழங்கி வருகிறார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன், 35.

ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந் தவர். 10 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்த இவர், மூன்று ஆண்டுக்கு முன் ஊர் திரும்பினார்.பெற்றோர், மனைவி, மகனுடன், குடிசையில் வசித்து வருகிறார். சிறு வயதில், வறுமையில் தான் பட்ட கஷ்டத்தை உணர்ந்து,வெளிநாட்டில் வேலை செய்து, சேமித்த பணத்தை கொண்டு, ஆதரவற்ற முதியவர்களுக்கு, தினமும் உணவு மற்றும் உடை வழங்கி வருகிறார்.

தன் குடும்பத்தினரின் ஆதரவுடன் வீட்டிலேயே உணவு சமைத்து, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, பூம்புகார் பகுதிகளில், வறுமையில் பட்டினியால் வாடும் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிப் பிடித்து, வழங்கி வருகிறார். தன்னைப் போல மற்றவர்களும், ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற நோக்கில், தன் பணிகளை, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதன் பயனாக, கையிருப்பு முழுவதும் கரைந்த நிலையில், இனி என்ன செய்வது என கலங்கி நின்ற பாரதிமோகனுக்கு, முகநுால் நண்பர்கள் கைகொடுத்து, நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அதனுடன், தன்னால் இயன்ற வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து, ஆதரவற்ற முதியோருக்கு தொய்வின்றி உதவிகள் செய்து வருகிறார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் – குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்.

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்.

முசிறியில், கூலித் தொழிலாளியின் மனைவி, 11வது பிரசவத்தில், 12வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.திருச்சி, முசிறியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி கண்ணன், 47; மனைவி சாந்தி, 45. இவர், 10 முறை கர்ப்பமடைந்து, ஒரு முறை இரட்டை குழந்தை என மொத்தம், 11 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில், மூன்று குழந்தைகள் இறந்து விட்டன.எட்டு குழந்தைகள்தற்போது, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரு பெண்களுக்கு திருமணம் முடிந்து, சாந்திக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். சாந்தியின், 10 பிரசவங்களுமே, வீட்டிலேயே சுகப்பிரசவமாக நடந்துள்ளன. பிரசவத்துக்கு, அவரது கணவரே உதவி செய்துள்ளார்.இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு முன், சாந்தி மீண்டும் கர்ப்பமானார். இந்த பிரசவத்தையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்த தம்பதி, மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இது குறித்து, கிராம செவிலியர் மூலம் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், கடந்த மாதம், 25ம் தேதி, சாந்தியை வீட்டில் சந்தித்து, மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர்.மறுத்த சாந்தி, ‘அங்கு வந்தால், குடும்பக் கட்டுப்பாடு செய்து விடுவீர்கள்’ எனக் கூறி, காவிரி ஆற்றில் இறங்கி ஒளிந்து கொண்டார். போலீசாரின் உதவியுடன், அவரை முசிறி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சை அளித்தனர்.தீபாவளிக்கு, ‘எஸ்கேப்’தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி, மருத்துவமனையில் இருந்து சென்ற சாந்திக்கு, 12ம் தேதி இரவு வீட்டிலேயே, 12வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த சுகாதாரத் துறையினர், நேற்று முன்தினம் அவரை, தண்டலைபுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரு பிரசவத்தையே பெரும் பிரச்னையாகக் கருதும் காலத்தில், 11 பிரசவங்களையும் வீட்டிலேயே பார்த்துக் கொண்ட சாந்தி கூறியதாவது:என் பிரசவத்தை நானே பார்த்துக் கொள்வேன். கணவர் உதவி செய்வார். இந்த பிரசவத்துக்கும் அவர் தான் உதவினார். பிரசவம் முடிந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி, அரை மணி நேரத்திற்கு பின், டீ குடித்து, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.அதற்குள் வந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர். நான் நன்றாக வேலை பார்ப்பேன். கர்ப்பம் பற்றி கவலைப்படாமல் வேலை பார்ப்பேன். சுகப்பிரசவத்துக்கு வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை. பிரசவ நேரத்தில், கணவரைத் தவிர வேறு யாரையும் பக்கத்தில் விட மாட்டேன். இந்த முறை தான் கொஞ்சம் சோர்வாக இருந்தது.இவ்வாறு, சாந்தி கூறினார்.மணல் விற்பனைகாவிரி ஆற்றங்கரையில் மூட்டையில் மணல் அள்ளி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில், சாந்தி, பிள்ளைகளை வளர்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், ஒரு நாளைக்கு, 300 மூட்டைக்கு மேல் மணல் சுமந்து விற்று விடுவார். இதுவே, சுகப்பிரசவத்துக்கு காரணம் என, சாந்தி கூறுகிறார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்