ஞாயிறு. செப் 22nd, 2019

செய்தி

News – செய்திகள்

தொண்டு செய்வதே மகிழ்ச்சி அளிக்கிறது – பண்டிகை நாட்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நெகிழ்ச்சி

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், ஆயுதபுஜை, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சேவை நோக்கத்தோடு, அரசுத்துறைகளின் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரை பிரிந்து பணிபுரிந்து பொது மக்களுக்கு சேவை புரிகின்றனர். அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அதன் விபரம்:

மக்கள் நலனே உயிர்மூச்சு எஸ்.சுரேஷ், தீயணைப்பு வீரர், தேனி:

”பணியில் சேர்ந்த பதினேழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கொடைக்கானலில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்தேன். திண்டுக்கல், தேனி என இரண்டு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். உயிர்காக்கும் பணி ஆபத்தானது என்றாலும், ஆபத்தான, பேரிடர் காலங்களிலும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் விடுமுறை எடுத்தது கிடையாது. பயிற்சி காலங்களில் பொதுமக்கள் நலனே உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதனால் மக்கள் நலனே உயிர் மூச்சு என பணி செய்வது சந்தோஷமாக உள்ளது. எனது குடும்பத்தினர் இந்த சேவைப் பணியை புரிந்து கொண்டு வழிநடத்துவதும், வழிநடப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.”, என்றார்.

கவலை மறந்து போகும்- எஸ்.அழகுமணி, சில்வார்பட்டி கண்டக்டர், தேனி பணிமனை:

”தீபாவளி என்றாலே இல்லத்தில் கொண்டாட்டம் தான். குழந்தைகள் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், நாங்கள் அவ்வாறு விழா காலங்களில் வீடுகளில் இருந்து கொண்டாட முடியாது. மனதுக்கு வேதனையாகத்தான் இருக்கும்.ஆனால், பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலைய பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். இருந்த போதிலும் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று நினைக்கும் போது கவலை, கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போகும்.”, என்றார்.

சேவையில் மனநிறைவு – டாக்டர் டி.ஜான்ஸிராணி, அரசு மருத்துவமனை, பெரியகுளம்:

”மருத்துவ சேவையையும், மருத்துவர்களையும் ஆண்டவனுக்கு நிகராக மக்கள் மதிக்கின்றனர். அதனால் தீபாவளியன்று பணி செய்வதற்கு அதிக விருப்பம். தீபாவளியன்று அவசர வார்டில் 24 மணி நேரம் பணியில் உள்ளேன். நேற்று வெளி நோயாளியாக 300 பேர் சிகிச்சை பெற்று சென்றனர். பட்டாசு வெடித்து விரலை காயப்படுத்திய ஆதீஸ்வரன், 13 உட்பட 5 பேருக்கு தீக்காயம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 55 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். பண்டிகை நாள் பார்த்து நோய் வருவதில்லை, மருத்துவம் என்பது அவசர காலபணி ஒவ்வொரு நிமிடமும் நோயாளிக்கு முக்கியத்துவமானது. நோயாளிகள் எங்களை இறைவனாக பார்க்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக, உண்மையாக அதேநேரத்தில் அவர்களை காப்பாற்ற முழுமுயற்சி செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்களின் நோக்கம். அதுதான் மனதிற்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது. எப்போதுமே பணி முடிந்த பின், தீபாவளி கொண்டாடுவதுதான் என் வழக்கம்.”, என்றார்.

கடவுளின் பாக்கியம் – ஏ.ராஜலிங்கம்: (சப்- இன்ஸ்பெக்டர், போடி) :

காவல்துறைப் பணியில் சேவை நோக்கு அதிகரித்து இருக்க வேண்டும். தீபாவளி நேரங்களில் குடும்பத்தோடு வீட்டில் கொண்டாடாமல் இருப்பது வருத்தம் அளிக்கும்.பழகிப் போன விசயமாக இருந்தாலும், சீருடை அணிந்து விட்டால் எந்த நினைவுகளும் வருவதில்லை. எப்போதும் போல ‘டூயூட்டி’ பார்ப்பது போல மட்டற்ற மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.திருவிழா என்றாலே போக்குவரத்து, மக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கும். இந்த நேரங்களில்மக்கள் சந்தோசமாக இருக்கவும், பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும் பொருட்டும், வீட்டை விட்டு வெளியேறும் போது மக்களுக்காக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைப்படுகிறேன். இன்று ஒரு நாள் கஷ்டங்களை மறந்து பொதுமக்களில் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி சந்தோசப்படுவோரின் முகங்களை பார்க்கும் போது, அளப்பரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது.”, என்றார்.

தொண்டு செய்வது மகிழ்ச்சியே எம். அனுசுயா, நர்ஸ், கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:

”தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என, அரசு விடுமுறை நாட்களில் பணிகள் செய்வது மகிழ்ச்சி. உயிர்காக்கும் அவசர சிகிச்சையில் பணி புரிவது மிகப்பெரிய தொண்டு செய்வது போன்றது. இத்தீப திருநாளை சந்தோசமாக அனைவரும் கொண்டாடினாலும், பல எதிர்பாராவிதமாக ஏற்படும் சம்பவங்களை தடுக்க முடியாது. தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில், காலையில் இருந்து மதியம் வரை 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்துள்ளனர். மற்ற அனைத்து இடங்களிலும் விடுமுறை காரணமாக சிகிச்சை பெற முடியாத நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் காய்ச்சலால்சிரமம் அடைந்திருந்தாலும் மிகுந்த சந்தோசமுடன் வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட அரசு விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபட்டுள்ளேன். விடுமுறை நாட்களில் பணியாற்றுவதில் ஏற்படும் முக்கியத்துவம் குறித்து பயிற்சி பெற்றது, உதவியாக இருக்கிறது.”, என்றார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…!
-ஷாஜஹான் முஹமது யாசின் & குடும்பத்தினர்._
We are wish you and your families Deepavali greetings
Shajahan Mohamed Yasin & Family.

பள்ளி ஆசிரியை குத்திக் கொலை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் வசந்தபிரியா (25). இவர் திருவிடைமருதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர் இன்று மாலை பணி முடிந்து சொந்த ஊரான திருவிடைமருதூர் திரும்பும் போது மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணத்தில், தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது. திருமணத்திற்கு மறுத்ததால், ஆசிரியையின் அத்தை மகனே, கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைராக பணிபுரிபவர்,வசந்தபிரியா, 25. இவரை, அத்தை மகனான, கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த நந்தகுமார், 34,திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளான். இந்நிலையில், வலங்கைமானைச் சேர்ந்த வேறு ஒரு மாப்பிள்ளைக்கும் வசந்தபிரியாவிற்கும் திருமணம் செய்ய, உறவினர்கள் நிச்சயத்துள்ளனர். இதனால், நந்தகுமார், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வசந்தபிரியாவை வற்புறுத்தியுள்ளான். நேற்று முன்தினம் மாலையில், நண்பர் ஒருவரின் பைக்கில் வந்து, வசந்தபிரியாவை அழைத்துச் சென்றுள்ளான். கும்பகோணம், உமாமகேஸ்வரபுரம் பகுதியில் வந்தவுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நந்தகுமார் கேட்டுள்ளான். அதற்கு, வசந்த பிரியா மறுத்ததால், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால், வசந்தபிரியா கழுத்தை அறுத்து, திட்டக்குடிக்கு சென்றுள்ளான். திருவிடைமருதூர் போலீசார், வசந்தபிரியாவின் மொபைல் போனில் தொடர்பு கொண்டவர்களின் எண்கள், பள்ளி வாசலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, நந்தகுமார் வசந்த பிரியாவை பைக்கில் அழைத்து சென்று கொலை செய்திருப்பதை கண்டுபிடித்தனர். திருவிடைமருதூர் போலீசாரின் துரித நடவடிக்கையால், கொலை நடந்த, ஐந்து மணி நேரத்தில் நந்தகுமார் கைது செய்யப்பட்டான்.

மணல் கொள்ளை 10 பேர் கைது.

மயிலாடுதுறை:
கொள்ளிடம் பகுதியில், நூதன முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட, ஏழு லாரிகளை பறிமுதல் செய்து, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் அரசின் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையின் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பல தனியார் சவுடுமண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், இந்த சவுடு மண் குவாரிகளில் இருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கும் லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு, செல்லும் மணல் லோடுகளின் எண்ணிக்கை, அரசுக்கு தெரியாமல் இருக்க, ஒரு அனுமதி சீட்டை வைத்து, பல லோடு மணலை எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். அதற்காக குவாரி நடத்துபவர்கள் நூதன முறையில், தீயால் அழியக்கூடிய மையை பயன்படுத்துகின்றனர். இந்த நூதன மோசடியால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க, மாவட்ட, எஸ்.பி., விஜயகுமார் உத்தரவிட்டார். அதையடுத்து விசாரணை நடந்து வரும் நிலையில், கொள்ளிடம் போலீசார் நேற்று முன்தினம் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணல் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதி சீட்டுகளும், அதில் அழியக்கூடிய மையால் எழுதியிருப்பதும், நெருப்பை காட்டினால் அழியக்கூடிய மை நிறப்பப்பட்ட பேனாக்கள் இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து பேனா மற்றும் அதை பயன்படுத்தி மணல் ஏற்றி வந்த ஏழு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மணல் கொள்ளையில் ஈடுபட்ட, 10 பேரை கைது செய்தனர்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

சட்ட கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு : 21 பேருக்கு விதித்த, 3 ஆண்டு சிறை ரத்து..

சென்னையில், சட்டக் கல்லுாரி மாணவர்கள் மோதி கொண்ட வழக்கில், சமரச தீர்வுக்கு அனுமதி கோரிய மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று, 21 பேருக்கு விதிக்கப்பட்ட, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை, ரத்து செய்தது.சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லுாரி வளாகத்தில், மாணவர்களில் இரு தரப்பினருக்கு இடையே, மோதல் வெடித்தது. இரு தரப்பினரும், தாக்கி கொண்டனர். விசாரணைஇந்த மோதலில், மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 2008, நவம்பரில், இந்த சம்பவம் நடந்தது. அய்யாதுரை என்பவர் அளித்த புகாரில், 41 பேர் மீதும், சித்திரைசெல்வன் என்பவர் அளித்த புகாரில், இருவர் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், 21பேருக்கு, தலா, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ௨௦௧௬ ஜனவரியில் தீர்ப்பு அளித்தது. மற்றவர்களை விடுதலை செய்தது. இதற்கிடையில், தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பலர், சட்டப் படிப்பை முடித்து, வழக்கறிஞர்களாகவும் பதிவு செய்தனர்.சிறை தண்டனையை எதிர்த்து, அய்யாதுரை, சித்திரைசெல்வன் உள்ளிட்ட, ௨௧ பேரும், மேல்முறையீடு செய்தனர். மனுக்கள், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, இரு தரப்பிலும் சமரச தீர்வு காண்பதாகவும், அதற்கு அனுமதிக்கும்படியும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.மாணவர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், அனந்த நாராயணன், அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர், சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகினர்.இவ்வழக்கில், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார், நேற்று பிறப்பித்த உத்தரவு:தண்டனை விதிக்கப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, சமரச உடன்பாடு பொருந்தாது. சமரச தீர்வுக்கு அனுமதித்தால், அது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகி விடும். ஆனால், சில வழக்குகளில், சாட்சியங்களை கணக்கில் கொண்டு, சட்டப் பிரிவுகளை மாற்றியதற்கு, முன்னுதாரணங்கள் உள்ளன.அனுமதிசட்டக் கல்லுாரி முதல்வர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இவ்வழக்கில், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. ஒருவரை தவிர, மற்றவர்களை அடையாளம் காண முடியவில்லை என, கல்லுாரி முதல்வரும் சாட்சியம் அளித்துள்ளார்.குறிப்பிட்ட குற்றவாளி தான் ஆயுதங்களால் தாக்கி, காயம் ஏற்படுத்தினார் என்பதை உறுதி செய்ய, நேரடி சாட்சி இல்லை. அதேநேரத்தில், கடுமையான காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கு, ஆதாரங்கள் உள்ளன. விசாரணை நீதிமன்றத்தில், வாக்குமூலம் அளித்தவர்களும், பிறழ் சாட்சியாக மாறி உள்ளனர்.எனவே, இவர்களை தண்டிக்க வேண்டும் என்றால், வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் தான் முடியும். அதனால், உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறையை கையாண்டு, சட்டப் பிரிவில் மாற்றம் செய்கிறேன். அந்தப் பிரிவுக்கு, சமரச உடன்பாடு பொருந்தும்.பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமரச தீர்வுக்கு, இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. சமரச தீர்வுக்கு அனுமதி வழங்கியதால், இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ரத்து செய்யப்படுகிறது. மனித வாழ்க்கை, கடவுள் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு.பள்ளி, கல்லுாரி நாட்களில், படிப்பு மட்டும் அல்லாமல், நன்னெறிகளையும், மாணவர்கள் பயில வேண்டும். சமூகத்துக்கு பயன்படும் வகையில், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். சகோதரத்துவத்தை மனதில் வைத்து, அவ்வப்போது தோன்றும் பகை உணர்வுகளை, அப்படியே புதைத்து விட வேண்டும். தேசப்பிதா மகாத்மா காந்தி, மனித குலத்துக்கு அளித்த பெரிய ஆயுதம், அகிம்சை தான்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

குழந்தை எரிப்பு நரபலியா…?

நாகப்பட்டினம் மாவட்டம்,
தெற்குபொய்கை நல்லுார், இ.சி.ஆரை ஒட்டிய வீரன் கோவில் அருகேயுள்ள குளக்கரையில், குழந்தையின் உடல் எரிக்கப்பட்டு எலும்புகள் கிடப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேளாங்கண்ணி போலீசார் சென்று பார்த்த போது, தீயில் கருகிய நிலையில் எஞ்சியிருந்த குழந்தையின் எலும்புகளை சேகரித்து, வழக்கு பதிந்து, நரபலி நடந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் தான் எடுக்கலாம்: நாளை முதல் எஸ்.பி.ஐ., கட்டுப்பாடு.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, நாளை (அக்.31-ம் தேதி) முதல் அமலாகிறது.
அதன்படி, ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரிக்க

    இது குறித்து எஸ்.பி.ஐ கூறியுள்ளதாவது: .மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தகவல் – கிராமத்தான் முயாஷா.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றம்.

தமிழகத்தில் தீபாவளி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

மேல்முறையீடு

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, தமிழகத்தில், நவ., 6ம் தேதியும், வட மாநிலங்களில், 7ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, தீபாவளியின் போது, அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படும். இதனால், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. சமீபத்தில், இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில், ‘தீபாவளி அன்று இரவு, 8:00 – 10:00 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.இந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடும், சிறார்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை, மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்படி, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு தொல்லை – மாணவன் கைது

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 18 வயது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன், பக்கத்து வீட்டில் தனியாக இருந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, அவரது தாய் ஓடி வருவதைக் கண்ட ரஞ்சித், அங்கிருந்து ஓடியுள்ளான். இதையடுத்து, சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் படி, சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்