ஞாயிறு. செப் 22nd, 2019

செய்தி

News – செய்திகள்

மயிலாடுதுறையில் உதவி தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி

மயிலாடுதுறை அக்.21: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சிக்குழுமம் (CIDC) இணைந்து நடத்தக்கூடிய உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் 18 வயது முதல் 40 வயது வரை யாவரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

  • கட்டுமான வேலை ( Mason General)
  • அசிஸ்டெண்ட் எலக்ட்ரீசியன் ( Assistant Electrician)
  • கம்பி வேலை செய்பவர் (Bar Bender & Steel Fixer )
  • கட்டுமான வேலை டைல்ஸ் கல் பதிப்பது (Mason Tiling)
  • பிளம்பர் ( Plumber)
  • கட்டிட பெயிண்டர் மற்றும் டெகரேட்டர் ( Construction painter & Decorator )

தேவையான ஆவணங்கள்:

கல்வி தகுதி சான்றிதழ், முகவரி சான்று, அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
IAT தொழிற் பயிற்சி நிறுவனம்
M. A. ரசாக் டவர், இரண்டாவது தளம், கச்சேரி ரோடு, மயிலாடுதுறை.
தொலைபேசி: 9842415073

– நன்றி Mayiladuthurai News

நம்ம ஊரு சாதனை பெண்மணி

தன் மகளின் மருத்துவ கனவை நனவாக்கிய மயிலாடுதுறையின் பெண் கூலித்தொழிலாளி

இவர்தாங்க நம்ம மயிலாடுதுறையின் சாதனை பெண்மணி ராஜாமணி. மயிலாடுதுறை இராணி மஹால் அருகில் தட்டாரத்தெருவில் வசித்து வருகிறார். மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி கழுவி சுத்தம் செய்து தரும் கூலித்தொழிலாளி. தற்போது 44 வயதாகும் ராஜாமணிக்கு 2 குழந்தைகள். மூத்த பையன் இரத்த சுரப்பி வளர்ச்சி இல்லாததினால் உடல் ஊனமுற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி நான்காம் ஆண்டு மருத்துவம் (Doctor of Medicine) ரஷ்ய நாட்டில் படிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி விஜயலட்சுமி 11 மாத குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தை ராஜேந்திரன் இறந்துவிட்டார். தன் கணவனை இழந்துவிட்ட நிலையில் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொருப்பு ராஜாமணிக்கு. மீனை கழுவி சுத்தம் செய்து தரும் வருமானத்தில் தன் பிள்ளைகளை வளர்த்து வந்தார் ராஜாமணி. தன் வியர்வை சிந்திய உழைப்பால் தற்போது தன் மகளின் மருத்துவ கனவையும் நனவாக்கியுள்ளார். தன் மகளின் மருத்துவ படிப்பிற்காக ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 6 லட்சம் செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாமல் தன் குடியிருக்கும் வீட்டையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ராஜாமணி.

கனவு என்னும் கரையை நோக்கி
ஆசை என்னும் அலைகளை கண்டுகொள்ளாமல்,
அறிவுரை என்னும் ஆழத்தை நினைக்காமல்,
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை(மருத்துவ கனவு) மனதில் கொண்டு,
கடந்து வந்த பாதையை நினைத்து கவலைபடாமல்
கரைதொடும் நேரம் தூரம் இல்லை என நினைக்கும்,
உறுதியான மனம் தந்த இறைவா!

அவளின் கனவுகளை கலைக்காமல்
ஒவ்வொன்றாய் நனவாக்கவே
இறைவா நீ அவளை
எனக்களித்தாய்!

– நன்றி Mayiladuthurai News

ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற மயிலாடுதுறை மண்ணின் மைந்தன் விசுவநாதன் ஆனந்த்…!

இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் விசுவநாதன் ஆனந்த் அவர்கள், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், நமது மயிலாடுதுறை மண்ணில் விஸ்வநாதன் அய்யர், சுசீலா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார். விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி மின்னல் சிறுவன் என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து, பதினெட்டு வயதில் உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார். இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளும், சர்வதேச விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்து, மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்து வரும் விசுவநாதன் ஆனந்த் அவர்கள் பெற்ற விருதுகளும், மரியாதைகளும்

1985 – அர்ஜுனா விருது.
1987 – இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.
1987 ஆம் ஆண்டிற்கான, தேசிய குடிமகன் மற்றும் சோவியத் லேண்ட் நேரு விருது.
1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ராஜீவ்காந்தி கோல் ரத்னா விருது.
1998 – பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், புக் ஆஃப் தி இயர் விருது.
2000 – மத்திய அரசால் பத்ம பூஷன் விருது.
1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, சதுரங்க ஆஸ்கார் விருது.
2007 – இந்திய அரசால் பத்ம விபூஷன் விருது.

தன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார் நம்ம மயிலாடுதுறை மண்ணின் மைந்தன்.

நன்றி :http://mayiladuthurainews.com/may_news/viswanathan_anand/
தகவல் – கிராமத்தான் முயாஷா.

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ …!

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ …!

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ செய்ய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அனுமதி அளித்துள்ளார். இழப்பீடு வழங்குவதில், 50 கோடி ரூபாய் முறைகேடு செய்ததால், அவருக்கு எதிராக, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் அல்லது காயம் அடைவோர் தொடர்பான வழக்குகளை, ஆர்.சி.டி., எனப்படும், ரயில்வே தீர்ப்பாயம் விசாரித்து, இழப்பீடுகளை அளித்து வருகிறது.

அம்பலம்

இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியான, ஆர்.கே.மிட்டல், இந்தாண்டு துவக்கத்தில், ஜார்க்கண்ட் மாநில
தீர்ப்பாயத்தில் பணியாற்றினார். அப்போது, குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களுடன் கூட்டு சேர்ந்து,
இழப்பீடுகளை முறைகேடாக அளித்து வந்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, ரயில்வே துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், 50 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்துள்ளது அம்பலம் ஆனது.
விபத்துகளில் இறந்ததாக, போலியாக சித்தரிக்கப்பட்ட நபர்களின் பெயர்களில், நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டு வந்து உள்ளன.பல சந்தர்ப்பங்களில், ஒரே விபத்து சம்பவம், மீண்டும் பல முறை குறிப்பிடப்பட்டிருந்ததும், ஏற்கனவே நஷ்ட ஈடு வழங்கப்பட்ட நபர்களின் பெயர்களில், மீண்டும் பல முறை நஷ்ட ஈடு வழங்கப்பட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.போலி வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும், பெருந்தொகை சென்று உள்ளது கண்டுபிடிக்க பட்டு உள்ளது.

முதல் முறை

இந்த விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதி, யு.யு.லலித், தற்போது விசாரித்து வருகிறார். இந்நிலையில், நீதிபதி,ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ செய்வதற்கான ஒப்புதலை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அளித்து உள்ளதாக, உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஊழல் விவகாரம் தொடர்பாக, ரயில்வே தீர்ப்பாய நீதிபதி, ‘சஸ்பெண்ட்’

செய்யப்படுவது, இதுவே முதல்முறை.

கடந்து வந்த பாதை!

ஆர்.சி.டி., எனப்படும், ரயில்வே தீர்ப்பாயத்தின் தலைவர், கே.கண்ணன், நீதிபதி மிட்டலின் முறைகேடுகள் குறித்து, சில மாதங்களுக்கு முன், ரயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மிட்டலை சஸ்பெண்ட் செய்யும்படி கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து, கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு, மிட்டல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இன்றி, தீர்ப்பாயத்தின் தற்போதைய நீதிபதியை, சஸ்பெண்ட் செய்ய முடியாது’ என, ரயில்வே வாரியம் கருதியது. எனவே, மிட்டல் சம்பந்தப்பட்ட கோப்பு, தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மிட்டலை சஸ்பெண்ட் செய்ய, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், தற்போது
ஒப்புதல் அளித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2018 22.00
தகவல் – கிராமத்தான் முயாஷா.

பஞ்சாப் – ரயில் விபத்தில் 50 பேர் பலி…!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், தசரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியை காண, ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், அவர்கள் மீது, அசுர வேகத்தில் வந்த ரயில் மோதி, 50 பேர் பலியாகினர்.

பஞ்சாபில், காங்.,கை சேர்ந்த, அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில், ஜோடா படாக் பகுதியில், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில், தசரா பண்டிகை கொண்டாட்டம் இரவு நடந்தது.இதில், ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உற்சாகத்தில் இருந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
மக்கள் வெள்ளத்தால், அந்த பகுதி நிரம்பி வழிந்ததால், அவர்களில் ஒரு பகுதியினர், தண்டவாளங்களில் நின்றிருந்தனர்.

அப்போது, தண்டவாளத்தில் உள்ளூர் ரயில், எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி, அசுர வேகத்தில் வந்தது. பட்டாசுகள் வெடித்ததால், ரயிலின் எச்சரிக்கை ஒலி, அவர்களுக்கு கேட்கவில்லை.

சில நொடிகளில், அந்த பகுதியை கடந்த, அந்த ரயில், தண்டவாளம் மீது நின்றிருந்தோரை நசுக்கி தள்ளியபடி சென்றது. இந்த துயர சம்பவத்தில், 60 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தசரா பண்டிகையின்போது நடந்த இந்த சோக சம்பவம், நாடு முழுவதும் மக்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடந்த பகுதியில், தசரா பண்டிகை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, காங்கிரசார் செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக, காங்.,கை சேர்ந்த, பஞ்சாப் சுற்றுலாத் துறை அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர் அழைக்கப்பட்டிருந்தார்.

பிரதமர் மோடி, ராஜ்நாத் ஆகியோர் இரங்கல்

ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பலியானவர்களின் குடும்பத்தினருக்க தலா ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்ககப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர்சிங் அமிர்தசரஸ் சென்று சம்பவ இடத்தை பார்வையிடுகிறார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

தலைவர்கள் இரங்கல்

ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், மே.வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பஞ்சாப் ரயில் விபத்தில் பலியானவர்கள் குறித்த செய்தி இதயத்தை உருக்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தகவல் – கிராமத்தான் முயாஷா.
பதிவு செய்த நாள்: வெள்ளி, அக் 19, 2018 22:26

சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல- மராத்தியர்களே.

சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,” என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.

சாம்பார் என்ற வார்த்தையைக் கேட்டாலே, தென் மாநிலங்களில் உள்ள பலருக்கு, நாக்கில் எச்சில் ஊறும். தமிழகத்தில் விருந்து என்றால், அதில் சாம்பாருக்கு நிச்சயம் இடம் உண்டு.வெங்காயம், முருங்கை, கத்தரி என, பல காய்கறிகளை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது. சாம்பாரை முதலில் தயாரித்தது, தமிழர்கள் தான் என, பலரும் நினைக்கிறோம்.

இந்நிலையில், டில்லி யைச் சேர்ந்த குணால் கபூர், தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றில், சமையல் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். உலக உணவு தினத்தை முன்னிட்டு, சமையல் கலை நிகழ்ச்சியில், சாம்பார் பற்றி அவர் கூறியதாவது:

தென் மாநில உணவில், சாம்பார் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதனால், சாம்பாரை தென் மாநில உணவு என, பலரும் கருதுகிறோம்.உண்மையில், முதன் முதலில், சாம்பார் வைத்தது, மராத்தியர்கள் தான். சத்ரபதி சிவாஜியின் மகன், சாம்பாஜி, மஹாராஷ்டிராவை ஆட்சி செய்த போது தான், சாம்பார் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.மன்னரை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு சாம்பார் என, பெயர் வைத்தனர். எனினும், இதற்கு, எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

இப்போது, துவரம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது. அப்போது, உளுந்தம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைத்தனர்.மராத்தியர்களுக்கு, போர்ச்சுகீசியர்கள் தான், மிளகாயை அறிமுகப்படுத்தினர். அதன் பின், நாடு முழுவதும் மிளகாயை, மராத்தியர்கள் பிரபலப்படுத்தினர். இப்போது, சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக, மிளகாய் மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை…

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராம மீனவர் கவியரசன். இவர், கடந்த 10ம் தேதி மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமானார். கடந்த ஐந்து நாட்களாக சக மீனவர்கள் அவரை தேடிவந்த நிலையில் இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர். மீனவர் கவியரசனை தேடவும் அல்லது ஆறுதல் கூறவும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும் இறக்கிவிட்டு கொடி மர மேடைகளை வெள்ளை துணியால் மூடினர். மேலும் அரசியல் கட்சியினரோ, அரசியல்வாதிகளோ தொடுவாய் கிராமத்தில் நுழையவும் தடைவிதித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

  • பதிவு செய்த நாள் :
  • ஞாயிறு 14 அக்டோபர் 2018

இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது…!

இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் மாறிய

-சிக்கிம் மாநிலத்திற்கு-

ஐ. நா., சபை விருது அளித்துள்ளது. 

            வேதி பொருள் மற்றும் உரத்தில் இருந்து விடுபட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறிய மாநிலம் என சிக்கிம் கடந்த 2016ல் அறிவிக்கப்பட்டது. சிக்கிம், விவசாய கொள்கைகள் மூலம் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதனால், சுற்றுலாவும் அதிகரித்து உள்ளது.  
             கடந்த ஆண்டுகளில், பாலைவனமாக்கல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்முறை, அணு ஆயுதங்கள், கடல் மாசுபாடு ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகளுக்கு ஐ.நா., வழங்கி வந்த விருது, இந்த ஆண்டு, இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம், மரம் நடுதல், மண்ணை பாதுகாக்கும் வகையில் பயிர்கள், வேதியியல் உரம் பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் மாறிய சிக்கிமிற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

              கடந்த 2014 முதல் 2017 ல் சிக்கிமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழல் இயலை பாதுகாக்கப்பதில் சிக்கிம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார். 
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கியதற்காகவும், இயற்கை உரம் குறித்து மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் டென் மார்க் நாட்டிற்கும் ஐ.நா., விருது அளிக்கப்பட்டு உள்ளது.

                                                                    (மேலும்…)

நீதிபதியின் மனைவி, மகனை சரமாரியாக சுட்ட பாதுகாவலர்.

குர்கானில் கூட்ட நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் நீதிபதியின் பாதுகாவலரால் சரமாரியாக சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம், குர்கானில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கிருஷண் கந்த். இவரது மனைவி ரித்து மற்றும் 17 வயது மகன் துருவ் ஆகியோர் பாதுகாவலர் மகிபால் (32)உடன் காரில் நேற்று(அக்.13) மதியம் 3 மணியளவில் மார்க்கெட்டிற்கு சென்றனர். 3.30 மணியளவில் வேலைகளை முடித்து விட்டு திரும்பிய ரித்து மற்றும் துருவ், வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர் மகிபால், ரித்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்தில் தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியால் ரித்துவை மார்பிலும், வயிற்றிலும் சரமாரியாக சுட்டார். அதை தடுக்க முயன்ற துருவையும் தோள்பட்டை, தலை என 3 முறை சுட்டார். இதில் துருவ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரித்துவை, மகிபால் காலால் பலமுறை மிதித்து தாக்கிவிட்டு, காருடன் தப்பிச் சென்றார்.
சம்பவ நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீதிபதி கிருஷணுக்கு போன் செய்த மகிபால், ‘உனது மனைவி மற்றும் மகனை கொன்று விட்டேன்’ என, கூறி உள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த சிலர் ரித்து மற்றும் துருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ரித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் துருவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு மகிபால் கைது செய்யப்படடார். அவரிடம் நடந்த விசாரணையில், என்னால் இதை நம்பமுடியவில்லை என்று மட்டும் மகிபால் திரும்ப, திரும்ப கூறி வருவதாகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மகிபால், நீதிபதியிடம் தனி பாதுகாலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தகவல் -கிராமத்தான் முயாஷா.

 

மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்- தலைவர்கள் அஞ்சலி…!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தி.மு.க.வில் செல்வாக்குமிக்கவராக இருந்தவர் பரிதி இளம் வழுதி, 58 கடந்த,1996-2001-ம் ஆண்டுகளில் தமிழக சட்டசபை துணை சபாநாயகராகவும், 2006-11-ம் ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அக்கட்சியில்இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 6 முறை தமிழக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இன்று சென்னையில் காலமானார்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்