செவ். பிப் 19th, 2019

வட்டாரம்

Regional news – வட்டார செய்திகள்

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் நீராடினர்.

குத்தாலத்தில், நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உக்தவேதீஸ்வரர், காளீஸ்வரர், சோழீஸ்வரர், மன்மதீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் மங்கள வாதியங்கள் முழங்க, வீதி உலா வந்து, காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.அங்கு, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வித்துன்மாலி என்ற அரக்கன், சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளிபடைத்த கிரகமாக மாறியதால், சூரியனால், பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது.
இதையடுத்து, சூரிய பகவான் குத்தாலத்தில் தவம் இருந்து, சிவபெருமான் அருள் பெற்றார் என்பதன் ஐதீகமாக, கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

வறுமையிலும் செம்மை…! உணவு வழங்கும் வாலிபர்.

வறுமையான சூழலிலும், ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை, வாலிபர் வழங்கி வருகிறார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன், 35.

ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந் தவர். 10 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்த இவர், மூன்று ஆண்டுக்கு முன் ஊர் திரும்பினார்.பெற்றோர், மனைவி, மகனுடன், குடிசையில் வசித்து வருகிறார். சிறு வயதில், வறுமையில் தான் பட்ட கஷ்டத்தை உணர்ந்து,வெளிநாட்டில் வேலை செய்து, சேமித்த பணத்தை கொண்டு, ஆதரவற்ற முதியவர்களுக்கு, தினமும் உணவு மற்றும் உடை வழங்கி வருகிறார்.

தன் குடும்பத்தினரின் ஆதரவுடன் வீட்டிலேயே உணவு சமைத்து, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, பூம்புகார் பகுதிகளில், வறுமையில் பட்டினியால் வாடும் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிப் பிடித்து, வழங்கி வருகிறார். தன்னைப் போல மற்றவர்களும், ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற நோக்கில், தன் பணிகளை, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதன் பயனாக, கையிருப்பு முழுவதும் கரைந்த நிலையில், இனி என்ன செய்வது என கலங்கி நின்ற பாரதிமோகனுக்கு, முகநுால் நண்பர்கள் கைகொடுத்து, நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அதனுடன், தன்னால் இயன்ற வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து, ஆதரவற்ற முதியோருக்கு தொய்வின்றி உதவிகள் செய்து வருகிறார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

பள்ளி ஆசிரியை குத்திக் கொலை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் வசந்தபிரியா (25). இவர் திருவிடைமருதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர் இன்று மாலை பணி முடிந்து சொந்த ஊரான திருவிடைமருதூர் திரும்பும் போது மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணத்தில், தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது. திருமணத்திற்கு மறுத்ததால், ஆசிரியையின் அத்தை மகனே, கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைராக பணிபுரிபவர்,வசந்தபிரியா, 25. இவரை, அத்தை மகனான, கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த நந்தகுமார், 34,திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளான். இந்நிலையில், வலங்கைமானைச் சேர்ந்த வேறு ஒரு மாப்பிள்ளைக்கும் வசந்தபிரியாவிற்கும் திருமணம் செய்ய, உறவினர்கள் நிச்சயத்துள்ளனர். இதனால், நந்தகுமார், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வசந்தபிரியாவை வற்புறுத்தியுள்ளான். நேற்று முன்தினம் மாலையில், நண்பர் ஒருவரின் பைக்கில் வந்து, வசந்தபிரியாவை அழைத்துச் சென்றுள்ளான். கும்பகோணம், உமாமகேஸ்வரபுரம் பகுதியில் வந்தவுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நந்தகுமார் கேட்டுள்ளான். அதற்கு, வசந்த பிரியா மறுத்ததால், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால், வசந்தபிரியா கழுத்தை அறுத்து, திட்டக்குடிக்கு சென்றுள்ளான். திருவிடைமருதூர் போலீசார், வசந்தபிரியாவின் மொபைல் போனில் தொடர்பு கொண்டவர்களின் எண்கள், பள்ளி வாசலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, நந்தகுமார் வசந்த பிரியாவை பைக்கில் அழைத்து சென்று கொலை செய்திருப்பதை கண்டுபிடித்தனர். திருவிடைமருதூர் போலீசாரின் துரித நடவடிக்கையால், கொலை நடந்த, ஐந்து மணி நேரத்தில் நந்தகுமார் கைது செய்யப்பட்டான்.

குழந்தை எரிப்பு நரபலியா…?

நாகப்பட்டினம் மாவட்டம்,
தெற்குபொய்கை நல்லுார், இ.சி.ஆரை ஒட்டிய வீரன் கோவில் அருகேயுள்ள குளக்கரையில், குழந்தையின் உடல் எரிக்கப்பட்டு எலும்புகள் கிடப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேளாங்கண்ணி போலீசார் சென்று பார்த்த போது, தீயில் கருகிய நிலையில் எஞ்சியிருந்த குழந்தையின் எலும்புகளை சேகரித்து, வழக்கு பதிந்து, நரபலி நடந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

சிறுமிக்கு தொல்லை – மாணவன் கைது

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 18 வயது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன், பக்கத்து வீட்டில் தனியாக இருந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, அவரது தாய் ஓடி வருவதைக் கண்ட ரஞ்சித், அங்கிருந்து ஓடியுள்ளான். இதையடுத்து, சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் படி, சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்