வி. அக் 24th, 2019

தமிழ்நாடு

Tamilnadu – தமிழ்நாடு

பயோ மெட்ரிக் கருவியில் ஹிந்தி மொழி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கருவிகளில் ஆங்கிலத்தில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு முன் அந்த கருவிகள் ‘அப்டேட்’ செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பயோ மெட்ரிக் கருவியில் ஹிந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது.

Thanks to https://www.dinamalar.com/news_detail.asp?id=2322841.

‘சரவண பவன்’ ஓட்டல்ராஜகோபால் காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ‘சரவண பவன்’ ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உடல் நலமின்றி இருந்த ராஜகோபாலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறையில் அடைக்க போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின் சிகிச்சைக்காக வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில்,
சிகிச்சை பலனின்றி இன்று(ஜூலை 18 வியாழக்கிழமை 2019) ராஜகோபால் காலமானார்.

சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்……!?

சேலம்: சேலத்திலும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து ‘வாட்ஸ் ஆப் பேஸ்புக்’கில் பரப்புவோம் என மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பல் போலீசில் சிக்கியது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்தள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் சேலத்திலும் பொள்ளாச்சியை மீறும் வகையில் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா 25. இவரது உறவினர் சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த மோகன சுந்தரம் 25. இருவரும் 22ம் தேதி இரவு 12:00 மணிக்கு பவானிக்கு பைக்கில் சென்றனர். வழியில் சேலம் பட்டர்பிளை பாலம் அருகே ஒரு கும்பல் வழிமறித்து பவித்ராவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது. அவரது புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார் புத்துாரை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ – மாணவியர் காதலர்களுடன் இரவு நேரங்களில் வரும்போது பட்டர்பிளை மேம்பாலம் அருகே சிலர் வழி மறித்து காதலர்களை துரத்தி விட்டு மாணவியரை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்து ஆபாச படம் எடுத்தது தெரியவந்தது.

அந்த காட்சிகளை அலைபேசியில் படம் பிடித்து ‘வாட்ஸ் ஆப் பேஸ்புக்கில் பரப்புவோம்’ எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். மல்லுார் சீலநாயக்கன்பட்டி கொண்டலாம்பட்டி அரியானுாரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வசதியான பெண்களிடம் நகை பணத்தை கறந்துள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான புத்துாரை சேர்ந்த மணிகண்டன் 31 என்பவனை பவித்ராவிடம் நகை பறித்த வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவனது கூட்டாளிகள் மூவரை வேறொரு வழக்கில் கைது செய்து கணக்கு காட்டி உள்ளனர். இந்த கும்பல் மூன்று ஆண்டுகளாக பல பெண்களை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக போலீசார் செயின் பறிப்பு வழக்கில் மூன்று பேரை மட்டுமே கைது செய்து பலாத்காரம் மிரட்டி பணம் பறித்த சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர்.

அம்பலமானது எப்படி?
பவானி இளம்பெண் பவித்ரா உறவினர் மோகனசுந்தரத்தை காதலித்து வந்துள்ளார். இருவரும் பவானிக்கு பைக்கில் சென்ற போது பட்டர்பிளை பாலத்தின் அருகே நிறுத்தி பேசியபடி இருந்துள்ளனர். இதை பார்த்த கும்பல் காதலர்களிடம் வந்து மிரட்டல் விடுத்துள்ளது. கத்தி முனையில் பவித்ராவை மிரட்டிய மணிகண்டன் ‘முத்தம் கொடு’ என கேட்டுள்ளான். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அது மட்டுமின்றி ‘என்னுடன் ஜாலியாக இருந்தால் விட்டு விடுகிறேன்’ எனவும் கூறியுள்ளான். அதற்கு சம்மதிக்காத அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள தான் அணிந்திருந்த 5 சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். இது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.
நன்றி – https://www.dinamalar.com/news_detail.asp?id=2241788.

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்.

கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனது வீட்டில் இன்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கனகராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே, அவரது உயிர் பிரிந்தது. சூலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இரங்கல்
கனகராஜ் மறைவுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம்.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…!

கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”

தலைப்பு :
————-
சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம்.
———————————————————————————————————-

கீரை : வல்லாரை காபி
————————-

தேவையான பொருட்கள்
————————-

வல்லாரைக் கீரை (நிழலில் உலர்த்தியது) – கால் கிலோ
மிளகு – 25 கிராம்
சுக்கு – 25 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
தனியா – 100 கிராம்

செய்முறை
————

உலரவைத்த கீரையுடன் மேற்கூறிய பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனை தினமும் 2 ஸ்பூன் அளவு எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. மேலும் சர்க்கரை நோய் , தூக்கமின்மை மற்றும் மனம்சார்ந்த குறைபாட்டால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக பயன்படும்.

இரவு படுக்கப் போகும் முன்
——————————

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வெள்ளி 15 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் – கிராமத்தான் முயாஷா.

33வது மாவட்டமாக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி உதயமாகிறது

தமிழகத்தின், 33வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி உதயமாகிறது. பத்துக்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளுடன், விழுப்புரம் மாவட்டம், பெரிதாக இருப்பதால், நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் காரணமாக, விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தலைமையில், தனி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

ஒருங்கிணைந்த கடலுார் மாவட்டத்திலிருந்து, 1993 செப்., 30ல், விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின், மையப் பகுதியில், விழுப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது. இது, நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டம். மொத்தம், 7,194 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. இம்மாவட்டத்தில், விழுப்புரம், வானுார், திண்டிவனம், மயிலம், செஞ்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் என, 11 சட்டசபை தொகுதிகள்; விழுப்புரம், கள்ளக்குறிச்சி என, இரண்டு லோக்சபா, தொகுதிகள் உள்ளன.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, 34.58 லட்சம். மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான, விழுப்புரம் மாவட்டத்தில், 13 தாலுகாக்கள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், மூன்று நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 1,099 ஊராட்சிகள், நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மக்கள், அதன் தலைநகரமான, விழுப்புரம் வந்து செல்ல, பெரிதும் சிரமப்பட்டனர்.

எனவே, ‘விழுப்புரம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்’ என, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

அப்போது, புதிய மாவட்ட அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

முதல்வர் கூறியதாவது: சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம்; உளுந்துார்பேட்டை, எம்.எல்.ஏ., குமரகுரு ஆகியோர், விழுப்புரம், பெரிய மாவட்டமாக உள்ளதால், அதை பிரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதாக, என்னிடம் தெரிவித்தனர். அதை பரிசீலித்து, விழுப்புரம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அதை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிய மாவட்டத்திற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களிடம், பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. புதிதாக, 33வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி உதயமாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ஆறு ஆண்டுகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள, 2.15 லட்சம் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், பேசி தீர்க்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உள்துறை செயலர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, சசிகுமார் என்பவருக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், மரணம் அடைந்ததாக, அவரது சகோதரர் புகார் கூறினார். ஊத்துக்குளி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். சசிகுமார் குடும்பத்துக்கு, 3.94 லட்சம் ரூபாய் வழங்க, தனியார் நிறுவனத்துக்கு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. நீதிபதி, எம்.வி.முரளிதரன் முன், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் பதிவு செய்த வழக்கின் நிலை பற்றி, கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அவினாசி நீதிமன்றம், வழக்கை முடித்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், 2009 முதல், 2014 வரை, முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை என்ற விபரங்களை, தாக்கல் செய்யும்படி, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு, நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் ஜெனரல் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஆறு ஆண்டுகளில், 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிகபட்சமாக,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 28 ஆயிரத்து, 573 வழக்குகளும்,
மதுரை மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 351 வழக்குகளும்
முடித்து வைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக,
நீலகிரி மாவட்டத்தில், 193 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அறிக்கையை பார்த்த நீதிபதி முரளிதரன், அதிர்ச்சி அடைந்தார்.

‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின், விசாரணை நடத்தாமல், போலீசார் துாங்கி விட்டனரா; குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டனரா’ என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.’ஆறு ஆண்டுகளில், இத்தனை வழக்குகள் என்றால், 2000ம் ஆண்டில் இருந்து கணக்கு எடுத்தால், 10 லட்சம் வழக்காவது முடிக்கப்பட்டிருக்கும்’ என்றும் தெரிவித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ”இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலங்களில் தவிர்க்க, தனி குழு அமைத்து, விசாரிக்கப்பட வேண்டும். போலீசுக்கு மட்டும் அல்லாமல், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் வழிமுறைகள் அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் பரிந்துரைகள் அளிக்கும்படி, நீதிபதி அறிவுறுத்தினார். பின், இவ்வழக்கில், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யை சேர்த்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

குண்டு குழந்தை – தவறான உணவால் அதிகரிப்பு: பெற்றோருக்கு ‘ரெட் அலர்ட்’.

வினோதினி எவ்வளவு சாப்பிட்டாலும் ‘சத்து வைப்பதில்லை’ என்பதுதான், சமீபகாலமாக தாய் கார்த்திகாவை வாட்டியெடுக்கும் முக்கிய கவலை. நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குள், எப்படியும் அவளை ‘கொழுக் மொழுக்’ ஆக மாற்றி விட வேண்டுமென்பதுதான் உடனடி இலக்கு. கார்த்திகாவைப் போல் பல அம்மாக்களின் கவலையும், குழந்தை பார்க்க புஷ்டியாக இருக்க வேண்டுமென்பதுதான்.

ஆனால், ஆரோக்கியத்துக்கும் உடல் எடைக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக்கொள்ளும் டாக்டர்கள், மற்றொரு அதிர்ச்சி தகவலையும் கூறுகின்றனர். அது…அதிக உடல் பருமனுள்ள குழந்தைகள் பட்டியலில், தமிழகம் வெகு விரைவில் முன்னிலை பெற போகிறது என்பதுதான்.’போதும்மா’ என்று குழந்தைகள் சொன்னாலும், உணவை திணிப்பதில்தான் அம்மாக்களின் முழு கவனமும் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு, புத்தகப்பையை விஞ்சிவிடும் அளவு, மதிய உணவு கொடுத்தனுப்புகின்றனர். இடைவேளை விடாமல் சாப்பிடும் அளவுக்கு, விளையாட அனுப்புவதில்லை. இதுவே, எடை அதிகரிக்க காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சர்க்கரை நோய்க்கு அழைப்பு

‘பள்ளி விட்டால் வீடு; மீண்டும் பள்ளி’ என 24 மணி நேரத்தையும் நான்கு சுவர்களுக்குள் குழந்தைகள் கழிக்கின்றனர். இதுதான் எடை அதிகரிக்க காரணம். இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் மேற்கொண்ட ஆய்வில், ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட நகர்ப்புற குழந்தைகளில், 29 சதவீதம் பேர், அதிக எடையுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக உடல் எடை காரணமாக, 100ல், ஆறு குழந்தைகள் சர்க்கரை வியாதிக்கு ஆளாவது அதிர்ச்சிக்குரிய தகவல்.

எடை அதிகரிக்க காரணம்

குழந்தைகளின் எடையை கூட்டுவதில், உப்பு சுவையுள்ள நொறுக்கு தீனிக்குதான் முக்கிய பங்கு. அதிக கலோரிகள் கொண்ட இந்த பாக்கெட் ஸ்னாக்ஸ், மென்மேலும் சாப்பிடும் உணர்வை துாண்டுகிறது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை, குழந்தைகள் விரும்ப இதுவே காரணம்.’டிவி’, மொபைல் போன்களில் ஆழ்ந்தபடி சாப்பிடுவோர், தேவையை விட அதிக உணவு உட்கொள்கின்றனர். அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோயில் துவங்கி, இதய நோய்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கும்.ஆகவே, பெற்றோரே… குழந்தைகள் சுறுசுறுப்பாக, உயரத்துக்கு ஏற்ற எடையுடன் உள்ளனரா… கவலையை விடுங்க!

பாரதியை மறக்காதீங்க!

‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்ற பாரதி வரிகளை பின்பற்றினாலே போதும். மண்ணில் விளையாடினால், கிருமிகள் தொற்றி விடும் என நினைத்து, விளையாட அனுமதிக்காததால், ஏராளமான நோய்களுக்கு, உடல் சிவப்பு கம்பளம் விரித்துவிடுகிறது. பசித்தால் சாப்பிடு என குழந்தைகளை பழக்கினாலே போதும். பசி எடுக்காத போது சாப்பிடும் உணவு விஷம் தான். அதிக எடை, கவனச்சிதறலுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
– சதீஷ்குமார்,
ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம்.

பாக்கெட் உணவை பக்கத்தில் விடாதீங்க!

* குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், எடைக்கும் சம்பந்தமே இல்லை. வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிட கொடுப்பது தான் சிறந்தது. கால்சியம் வேண்டுமென, பலர் அளவுக்கு அதிகமாக பால் கொடுக்கின்றனர். பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட கொடுப்பதால், குடல் சார்ந்த நோய்கள் வரலாம்.
*பாக்கெட் உணவுகளும், எடை அதிகரிக்க காரணம். ஒரு டம்ளர் பால், இரண்டு பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு, நாள் முழுக்க பசியே எடுக்காது. சாப்பிட அடம் பிடிப்பதற்கு, இதுதான் காரணம்.
* மொபைல்போன் பார்த்தபடி சாப்பிடுவதால், உணவை அரைக்காமல் விழுங்குவர்.
இது, செரிமான பிரச்னைக்கும் காரணமாகிவிடும். உயரத்துக்கேற்ற எடையோடு, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, சிறப்பு கவனிப்பு தேவையில்லை.

– தர்மேந்தர், குழந்தைகள் நல மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை.

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது

உயரத்துக்கு ஏற்ற எடைதான் சரியான அளவீடு. அதிக உணவால், 27 சதவீத குழந்தைகளுக்கு, எடை மட்டுமே கூடுகிறது. இதிலும், 14-18 வயதுக்கு உட்பட்டோரில், 41 சதவீதம் பேர், அதிக உடல் எடையால் அவதிப் படுகின்றனர் என, உலக சுகாதார ஆய்வு நிறுவன புள்ளி விபரம் கூறுகிறது.

நகர்ப்புறத்திலே ‘டாப்’

* நகர்ப்புறத்தில் வசிக்கும் குழந்தைகள் 100 பேரில், 36 பேர் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

*கிராமம், புறநகர் பகுதிகளில் இது, 25 சதவீதமாக உள்ளது.

*41.2 சதவீத குழந்தைகள், விளையாடுவதே இல்லை.

*அளவுக்கு அதிகமான எடையால், 22 சதவீத குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.

* ஐந்து வயதுக்குட்பட்ட, 27 சதவீத குழந்தைகள், உயரத்தை விட குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர்.

* 23 சதவீதம் பேர், உயரத்தை விட, அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

ஆதாரம்: இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல்.

மனஅழுத்தமும் காரணம் (மேலும்…)

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் – குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்.

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்.

முசிறியில், கூலித் தொழிலாளியின் மனைவி, 11வது பிரசவத்தில், 12வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.திருச்சி, முசிறியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி கண்ணன், 47; மனைவி சாந்தி, 45. இவர், 10 முறை கர்ப்பமடைந்து, ஒரு முறை இரட்டை குழந்தை என மொத்தம், 11 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில், மூன்று குழந்தைகள் இறந்து விட்டன.எட்டு குழந்தைகள்தற்போது, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரு பெண்களுக்கு திருமணம் முடிந்து, சாந்திக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். சாந்தியின், 10 பிரசவங்களுமே, வீட்டிலேயே சுகப்பிரசவமாக நடந்துள்ளன. பிரசவத்துக்கு, அவரது கணவரே உதவி செய்துள்ளார்.இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு முன், சாந்தி மீண்டும் கர்ப்பமானார். இந்த பிரசவத்தையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்த தம்பதி, மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இது குறித்து, கிராம செவிலியர் மூலம் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், கடந்த மாதம், 25ம் தேதி, சாந்தியை வீட்டில் சந்தித்து, மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர்.மறுத்த சாந்தி, ‘அங்கு வந்தால், குடும்பக் கட்டுப்பாடு செய்து விடுவீர்கள்’ எனக் கூறி, காவிரி ஆற்றில் இறங்கி ஒளிந்து கொண்டார். போலீசாரின் உதவியுடன், அவரை முசிறி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சை அளித்தனர்.தீபாவளிக்கு, ‘எஸ்கேப்’தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி, மருத்துவமனையில் இருந்து சென்ற சாந்திக்கு, 12ம் தேதி இரவு வீட்டிலேயே, 12வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த சுகாதாரத் துறையினர், நேற்று முன்தினம் அவரை, தண்டலைபுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரு பிரசவத்தையே பெரும் பிரச்னையாகக் கருதும் காலத்தில், 11 பிரசவங்களையும் வீட்டிலேயே பார்த்துக் கொண்ட சாந்தி கூறியதாவது:என் பிரசவத்தை நானே பார்த்துக் கொள்வேன். கணவர் உதவி செய்வார். இந்த பிரசவத்துக்கும் அவர் தான் உதவினார். பிரசவம் முடிந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி, அரை மணி நேரத்திற்கு பின், டீ குடித்து, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.அதற்குள் வந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர். நான் நன்றாக வேலை பார்ப்பேன். கர்ப்பம் பற்றி கவலைப்படாமல் வேலை பார்ப்பேன். சுகப்பிரசவத்துக்கு வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை. பிரசவ நேரத்தில், கணவரைத் தவிர வேறு யாரையும் பக்கத்தில் விட மாட்டேன். இந்த முறை தான் கொஞ்சம் சோர்வாக இருந்தது.இவ்வாறு, சாந்தி கூறினார்.மணல் விற்பனைகாவிரி ஆற்றங்கரையில் மூட்டையில் மணல் அள்ளி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில், சாந்தி, பிள்ளைகளை வளர்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், ஒரு நாளைக்கு, 300 மூட்டைக்கு மேல் மணல் சுமந்து விற்று விடுவார். இதுவே, சுகப்பிரசவத்துக்கு காரணம் என, சாந்தி கூறுகிறார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தொண்டு செய்வதே மகிழ்ச்சி அளிக்கிறது – பண்டிகை நாட்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நெகிழ்ச்சி

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், ஆயுதபுஜை, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சேவை நோக்கத்தோடு, அரசுத்துறைகளின் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரை பிரிந்து பணிபுரிந்து பொது மக்களுக்கு சேவை புரிகின்றனர். அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அதன் விபரம்:

மக்கள் நலனே உயிர்மூச்சு எஸ்.சுரேஷ், தீயணைப்பு வீரர், தேனி:

”பணியில் சேர்ந்த பதினேழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கொடைக்கானலில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்தேன். திண்டுக்கல், தேனி என இரண்டு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். உயிர்காக்கும் பணி ஆபத்தானது என்றாலும், ஆபத்தான, பேரிடர் காலங்களிலும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் விடுமுறை எடுத்தது கிடையாது. பயிற்சி காலங்களில் பொதுமக்கள் நலனே உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதனால் மக்கள் நலனே உயிர் மூச்சு என பணி செய்வது சந்தோஷமாக உள்ளது. எனது குடும்பத்தினர் இந்த சேவைப் பணியை புரிந்து கொண்டு வழிநடத்துவதும், வழிநடப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.”, என்றார்.

கவலை மறந்து போகும்- எஸ்.அழகுமணி, சில்வார்பட்டி கண்டக்டர், தேனி பணிமனை:

”தீபாவளி என்றாலே இல்லத்தில் கொண்டாட்டம் தான். குழந்தைகள் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், நாங்கள் அவ்வாறு விழா காலங்களில் வீடுகளில் இருந்து கொண்டாட முடியாது. மனதுக்கு வேதனையாகத்தான் இருக்கும்.ஆனால், பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலைய பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். இருந்த போதிலும் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று நினைக்கும் போது கவலை, கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போகும்.”, என்றார்.

சேவையில் மனநிறைவு – டாக்டர் டி.ஜான்ஸிராணி, அரசு மருத்துவமனை, பெரியகுளம்:

”மருத்துவ சேவையையும், மருத்துவர்களையும் ஆண்டவனுக்கு நிகராக மக்கள் மதிக்கின்றனர். அதனால் தீபாவளியன்று பணி செய்வதற்கு அதிக விருப்பம். தீபாவளியன்று அவசர வார்டில் 24 மணி நேரம் பணியில் உள்ளேன். நேற்று வெளி நோயாளியாக 300 பேர் சிகிச்சை பெற்று சென்றனர். பட்டாசு வெடித்து விரலை காயப்படுத்திய ஆதீஸ்வரன், 13 உட்பட 5 பேருக்கு தீக்காயம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 55 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். பண்டிகை நாள் பார்த்து நோய் வருவதில்லை, மருத்துவம் என்பது அவசர காலபணி ஒவ்வொரு நிமிடமும் நோயாளிக்கு முக்கியத்துவமானது. நோயாளிகள் எங்களை இறைவனாக பார்க்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக, உண்மையாக அதேநேரத்தில் அவர்களை காப்பாற்ற முழுமுயற்சி செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்களின் நோக்கம். அதுதான் மனதிற்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது. எப்போதுமே பணி முடிந்த பின், தீபாவளி கொண்டாடுவதுதான் என் வழக்கம்.”, என்றார்.

கடவுளின் பாக்கியம் – ஏ.ராஜலிங்கம்: (சப்- இன்ஸ்பெக்டர், போடி) :

காவல்துறைப் பணியில் சேவை நோக்கு அதிகரித்து இருக்க வேண்டும். தீபாவளி நேரங்களில் குடும்பத்தோடு வீட்டில் கொண்டாடாமல் இருப்பது வருத்தம் அளிக்கும்.பழகிப் போன விசயமாக இருந்தாலும், சீருடை அணிந்து விட்டால் எந்த நினைவுகளும் வருவதில்லை. எப்போதும் போல ‘டூயூட்டி’ பார்ப்பது போல மட்டற்ற மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.திருவிழா என்றாலே போக்குவரத்து, மக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கும். இந்த நேரங்களில்மக்கள் சந்தோசமாக இருக்கவும், பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும் பொருட்டும், வீட்டை விட்டு வெளியேறும் போது மக்களுக்காக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைப்படுகிறேன். இன்று ஒரு நாள் கஷ்டங்களை மறந்து பொதுமக்களில் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி சந்தோசப்படுவோரின் முகங்களை பார்க்கும் போது, அளப்பரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது.”, என்றார்.

தொண்டு செய்வது மகிழ்ச்சியே எம். அனுசுயா, நர்ஸ், கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:

”தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என, அரசு விடுமுறை நாட்களில் பணிகள் செய்வது மகிழ்ச்சி. உயிர்காக்கும் அவசர சிகிச்சையில் பணி புரிவது மிகப்பெரிய தொண்டு செய்வது போன்றது. இத்தீப திருநாளை சந்தோசமாக அனைவரும் கொண்டாடினாலும், பல எதிர்பாராவிதமாக ஏற்படும் சம்பவங்களை தடுக்க முடியாது. தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில், காலையில் இருந்து மதியம் வரை 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்துள்ளனர். மற்ற அனைத்து இடங்களிலும் விடுமுறை காரணமாக சிகிச்சை பெற முடியாத நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் காய்ச்சலால்சிரமம் அடைந்திருந்தாலும் மிகுந்த சந்தோசமுடன் வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட அரசு விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபட்டுள்ளேன். விடுமுறை நாட்களில் பணியாற்றுவதில் ஏற்படும் முக்கியத்துவம் குறித்து பயிற்சி பெற்றது, உதவியாக இருக்கிறது.”, என்றார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்