வி. அக் 24th, 2019

அரசியல்

Politics – அரசியல்

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை தேவை.

தேர்தல் ஜனநாயக முறை,
குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும். நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500 கொடுத்து உங்களை தோற்கடித்துவிடுவார். இதுதான், இன்றைய விசித்திர நிலை.அதுமட்டுமல்லாமல்,

தேர்தல் முடிவுக்குப் பின்னர், ‘எங்களுக்கு இத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், போதுமான இடங்கள் கிடைக்கவில்லை’ என்று பல கட்சிகள் புள்ளி விபரங்களை சொல்லி புலம்புவதை கேட்கிறோம். இந்த விசித்திரத்துக்கும், புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு, நமது தேர்தல் முறையை, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, ஒவ்வொரு ஓட்டுக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும். ஒரு தொகுதியில் அதிக ஓட்டு பெற்றவரே வெற்றி பெற்றவர். மேலோட்டமாக பார்த்தால், இதில் தவறு இருப்பதாக தெரியாது. ஆனால்,

பதிவான ஓட்டுகளில், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, முதல் இடத்தை பிடிப்பது இப்போது சகஜமாகி விட்டது. அதாவது, ஜெயித்தவர், 30 சதவீதம் பெற்றிருப்பார். அதன் அர்த்தம் என்ன? 70 சதவீதம் பேருக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால், அவருக்கு எதிராக, ஏழு பேர் நின்றதால், அந்த, 70 சதவீத ஓட்டுகள் அவர்களுக்கு ஆளுக்கு, 10 சதவீதமாக விழுந்திருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால், 30 சதவீத ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து அவரை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஆக்குகிறது நமது தேர்தல் முறை. ஆனால், 70 சதவீத வாக்காளர்களின் ஓட்டுகளுக்கு எந்த மதிப்பும் தரவில்லை.

கடந்த, 1989 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 31 இடங்களில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்றது. ஆனால், அந்த கட்சிக்கு, 70 லட்சம் பேர் ஓட்டு போட்டு இருந்தனர். 1990 தேர்தலிலும், தி.மு.க., 29 தொகுதிகளில் போட்டியிட்டு, 56 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியும், ஒரு இடம்கூட ஜெயிக்கவில்லை. 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 24 சதவீத ஓட்டு பெற்றது; 95 லட்சம் பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டிருந்தனர். எனினும், ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை. மாறாக, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற ஓட்டுக்கள், 17 கோடியே, 16 லட்சத்து, 37 ஆயிரத்து 684. இது மொத்த ஓட்டுக்களில், 31 சதவீதம்தான். ஆனால், அக்கட்சிக்கு, 282 எம்.பி.க்கள் இருந்தனர். இது மொத்தமுள்ள, எம்.பி.,க்களின் எண்ணிக்கையில், 51.9 சதவீதம்.அதே போல் காங்கிரசுக்கு, 10 கோடியே, 69 லட்சத்து, 35 ஆயிரத்து, 311ஓட்டுக்கள் கிடைத்தன. இது, 19.3 சதவீதம். ஆனால், காங்., — எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 44 மட்டுமே. அந்த தேர்தலில், உ.பி.,யில், 20 சதவீத ஓட்டுக்களை பெற்ற, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை.

விகிதாச்சார தேர்தல் முறையில்,
ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விகிதத்துக்கு ஏற்ப, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் இடங்கள் வழங்கப்படுகின்றன. சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை, 100 என வைத்துக்கொண்டால், 1 சதவீத ஓட்டு பெற்ற ஒரு கட்சிக்கு, ஒரு இடம் கிடைப்பது உறுதி. பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த ஓட்டுக்களுக்கு, ஏற்ப ஏற்கனவே கட்சி அளித்துள்ள பெயர் பட்டியல்படி,எம்.பி., — எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கப்படுவார்கள். தனித்து ஆட்சி அமைக்க, ‘மெஜாரிட்டி’ வராவிட்டால், ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். அரசியல், ஒரு, ‘பிசினசாகும்’ ஆபத்தை தடுக்க வேண்டும்; ரஷ்யா, ஜெர்மனி ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ், பிரேசில், வெனிசுலா உள்பட பல நாடுகளில் விகிதாச்சார தேர்தல் முறையே நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இம்முறையையே பின்பற்றுகின்றன.
இலங்கை, இம்முறையில் தான், எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கிறது. கடந்த, 1932 ல் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில், 33.1 ஓட்டுக்களை பெற்றே ஹிட்லர் அதிபராக வந்தார். 1949ம் ஆண்டு அந்த நாட்டில், விகிதாச்சார தேர்தல் முறை வந்தது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயக ஆட்சி தான் சிறந்தது என்ற நம்பிக்கை, அன்று முதல் பரவலானது. அப்படி மாறுவது, இங்குள்ள பல்வேறு சமூகங்களின் அச்சத்தை அகற்றுவதுடன், நாட்டின் எதிர்கால குழப்பங்களுக்கான தீர்வாகவும் அமையும் என்பது, 1928ம் ஆண்டு நேருவின் கருத்தாக இருந்தது.

பின்னர் அவர் பார்வை மாறியது வேறுவிஷயம். 1962 ல் கோவையில் நடைபெற்ற, தி.மு.க., பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று அண்ணாதுரை வலியுறுத்தினார். 1974ம் ஆண்டு, ஜெயபிரகாஷ் நாராயணனால் நியமிக்கப்பட்ட தார்க்குண்டே குழு ஜெர்மனியில் இருப்பது போன்ற தேர்தல் முறை இந்தியாவுக்கு வேண்டும் என பரிந்துரைத்தது.
அதன் பிறகு, தினேஷ் கோஷ்சுவாமி குழு (1990), வோரா கமிட்டி (1993), இந்திரஜித் குப்தா குழு (1998), தேர்தல் சட்ட திருத்தத்தின் மீதான சட்ட ஆணையத்தின், 170வது அறிக்கை (1999), அரசியல் சாசன நடைமுறை மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் (2001), இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னுரைக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் (2004), நிர்வாக சீர்திருத்த, இரண்டாவது ஆணையம் (2008), மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (2011) ஆகிய அனைத்தும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து நீண்ட ஆய்வை சமர்பித்தன.எனினும், எந்த மாற்றமும் நிகழவில்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வந்தால்,

அனைத்து ஓட்டுகளும் மதிப்பு பெறும். பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும். அவரவர் ஜாதி ஆதரவின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறக்கூடும் என்றாலும், மாகாணம் முழுவதும் சிதறிக்கிடக்கிற ஜாதிகளும், சிறிய ஜாதிகளும் எளிதில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார ஓட்டுரிமை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையை பின்பற்றிய, 89 நாடுகள், இன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறி விட்டன. உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த நடைமுறைதான் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதாக சொல்லப்படும் நமது நாடு, அனைத்து துறைகளுக்கும் தாயான, தேர்தல் துறையில் தேர்தல் முறையில் பின்தங்கி நிற்கலாமா? விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர கட்சிகளுக்கு நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் போடும் ஓட்டுக்கு மரியாதை வேண்டுமா, வேண்டாமா? யோசியுங்கள்.
நன்றி-ப.திருமலை, பத்திரிகையாளர்

தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் டிரண்டாகி வரும் ‘பாசிசம்’ என்ற வார்த்தை…!

தமிழக்தில் கடந்த சில நாட்களாகப் பாசிசம் என்ற வார்த்தை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பரபரப்பான பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இப்படி மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வரும் பாசிசம் என்ற வார்த்தைக்குப் பெரும்பாலானோருக்கு ஆழமான அர்த்தம், தீவிரத் தன்மை, ஏன் அந்த வார்த்தை குறிப்பிட்ட அரசு மீது பயன்படுத்துகிறார்கள் என்பது பலருக்கும் புரியாததாக இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி கருதப்படுகிறார். அதன்பின் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் முசோலினியை பின்பற்றி நாஜிசம் என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார். இதுதான் சுருக்கமான வரலாறாகும்.

இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் ஆகியோரே பாசிசத்துக்கு வரலாற்றில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பது சர்வாதிகாரியின் தலைமையில், சமூக நிறுவனங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி அதிகார வர்க்கத்தால்(போலீஸார், ராணுவம், ஆட்சிநிர்வாகம்) ஒற்றைக் கருத்தியலை சமூகத்தின் மீது திணித்து அடக்குமுறை செய்வதாகும்.

தேசத்தின் பெருமை, நலன், மகத்துவம், இனப்பெருமை, இனத்தின் மகத்துவம் ஆகியவையே பாசிச அரசின் பிரதானக் கொள்கை மற்றும் செயல்பாடாகும்.

தனிமனித உரிமைகளை மதிக்காமல், நாட்டு நலனுக்காக, வளர்ச்சிக்காக எனக்கூறி அரசுக்குச் செயல்பாடுகளை, நடவடிக்கைகளைக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் அதிகார எந்திரங்கள் மூலம் நசுக்குகிற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

எங்கிருந்து சொல் உருவானது?

பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானது. இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாகக் கட்டப்பட்ட குச்சிகளின் கட்டு என்பதாகும். கோடாரிச் சின்னமே பாசிச ராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. ஹிட்லர் தன் நாஜிக் கட்சியின் சின்னமாக ஸ்வஸ்திக்கைப் பயன்படுத்தினார்.

வரம்பற்ற அதிகாரம் கொண்ட அரசின் மகத்துவத்துக்காக தன்னுடைய அனைத்து உரிமைகளையும் எல்லோரும் அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பாசிசத்தின் இயல்புகள் :-

பாசிசத்தில் தலைவனை மக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள். அந்த வகையிலான மக்கள் கூட்டத்தை கொண்ட அரசாங்க முறைதான் பாசிச அரங்கமாகும். பாசிசம் நிலவும் அரசில் அஹிம்சை, சமத்துவம், ஜனநாயகம், தனிமனித உரிமை ஆகியவை நசுக்கப்படும். தலைவனைக் கண்மூடித்தனமாக மக்கள் பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவார்கள். அனைத்தும் நாட்டின் நலனுக்காக என்று மக்களின் மூளையில் ஏற்றப்படும். பாசிச அரசில் பள்ளி, குடிமக்களின் கல்வி, பணி, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தலையீடு இருக்கும்.

இன்றைய இளைய தலைமுறை மத்தியில் பாசிசம் என்ற வார்த்தை அதன் ஆழமான வரலாற்றுப் பின்னணி தெரியாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு வார்த்தையின் வரலாறும் காலப்போக்கில் விரிவடைவதும், பரவலாவதும் இயல்புதான். அந்த வகையில் இன்றைய சூழலில் பாசிசம்என்ற வார்த்தை பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
-கிராமத்தான் முயாஷா

மயிலாப்பூர் அக் 28: தமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம்

”எப்படி ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினோமோ, அதேபோல
இதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத, மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலப்படுத்த இருக்கிறோம்.”

அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி
மயிலாப்பூர், மாங்கொல்லை.

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

சிறப்புரை:
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள்
திருமுருகன் காந்தி | அருள்முருகன் | லெனாகுமார் | பிரவீன்குமார்

அனைவரும் அவசியம் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்

9884072010

பரியேறும் பெருமாள்: திருந்துங்கடா டீ வாங்கி தாரேன்

பரியேறும் பெருமாள்‘ படம் மூலமா தோழர் மாரி செல்வராஜ் இந்த சமூகத்துக்கு சொல்ல வரது என்னனா, “திருந்துங்கடா டீ வாங்கி தாரேன்”.

ரெண்டு மாசம் முன்னாடி ஒரு பறையிசை வரலாறு பத்தின நிகழ்வுல ஒரு விசயம் கேள்வி பட்டேன். அதாவது ஊரு சேரினு பிரிஞ்சு இருக்குற நம்ம கிராமங்கள்ல சேரில இருக்குறவங்க ஆண் நாய்கள வளர்க்க கூடாது. அப்டி ஏதாச்சும் ஆண் குட்டி பொறந்தா, அத அறுத்து போட்டுடனும். எங்க அந்த சேரில பொறந்த ஆண் நாய் ஊருல இருக்குற பெண் நாய்களோட சேந்துடுமோனு பயமாம். பிறப்பால் இங்க ஏற்ற தாழ்வு மனுசங்கள்ல மட்டும் பாக்கல அது மிருகங்கள் வரைக்கும் பாக்குறாங்கனு தெரிஞ்ச போது லைட்டா தொண்ட கவ்வுச்சு.

பரியேறும் பெருமாள் படத்துல இன்னும் இந்த ஏற்ற தாழ்வு வேற எங்க எங்கெல்லாம் தன்னோட வேலைய காட்டுதுனு சொல்லி இருக்கு. படம் பாக்கும் போது ஒரு நாலு அஞ்சு தடவ எனக்கு தொண்ட கவ்வுச்சு. நாம வெறும் முக்கியமான மாவட்ட செய்திகளா கடந்து போற ஒவ்வொரு சம்பவத்துக்கு பின்னாடியும் இருக்குற வலி வேதனை மூடத்தனம்னு எல்லாத்தையும் தெளிவு படுத்தியிருப்பாரு தோழர் மாரி.

வாழ்க்கைல ஒடுக்குமுறைய அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் ஒன்னொருத்தர் ஒடுக்கப்படும் போது அவங்க நிலைமை ஒடனே புரியும். இது வரைக்கும் எப்போவுமே உங்களக்கு வாழைப்பழம் வாயில ஊட்ட பட்டு இருந்தா, ஒன்னு உங்களுக்கு ஒடுக்கப்படுறவங்க நிலைமை புரிய லேட் ஆகும் இல்லாட்டி புரியவே புரியாது. இந்த லேட்டா புரியுற ஆளுங்களுக்கு பரியனோட பயணம் தன்னோட பயணமா உணர வெச்சு இருப்பாரு தோழர் மாரி. பல பேரால ஈசியா கேக்குற கேள்விகள ஏன் பரியனாள கேக்கவே முடியறது இல்லனு உங்களுக்கு புரியும். அந்த என்ன சொன்னாலும் புரியவே புரியாத ஆளுங்க மூஞ்சில, கடைசில காரி துப்பி இருக்கும் இந்த படம்.

இசை, பாடல் வரிகள், வசனம், நடிப்பு, யோகி பாபுவோட போற போக்குல பொசுக்குன்னு போடுற காமெடி எல்லாமே இந்த பரியனோட பயணத்த நமக்கு அழகா காட்டிருக்கு. கறுப்பி அண்ட் நான் யார் பாடல்கள் கண்டிப்பா எல்லாரையும் பாதிக்கும். திருநெல்வேலி படம்னாலே வெறும் ‘வாலே போலெ’ வெச்சு ஒப்பேத்துற படங்களுக்கு மத்தியில அந்த மாவட்டத்து மக்களோட வாழ்க்கையை ரெண்டரை மணி நேர கேண்டிட் ஷூட் மாதிரி அழகாவும் நேர்த்தியாவும் இந்த படம் காட்டிருக்கு.

ப. ரஞ்சித் அவரோட முதல் தயாரிப்பு, ராம் அவர்களோட அசிஸ்டன்ட் டைரக்டர் மாரி செல்வராஜ். இந்த ரெண்டு விசயமும் படம் பாக்குறதுக்கு முன்னாடியே ஒரு எதிர்பார்ப்ப ஏற்படுத்துச்சு. அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட மிஸ் ஆகல. படத்துல இத இப்டி பண்ணி இருக்கலாம் அந்த எடத்துல அத பண்ணியிருக்கலாம் அப்டி இப்டினு ஆயிரம் விமர்சனம் கண்டிப்பா வரும். தமிழ் சினிமால மிகவும் பேசப்பட்ட படங்கள்ல இதுவும் ஒரு படமா கண்டிப்பா இருக்கும். People won’t be able to ignore this movie.

இந்த படம் பாக்குற எல்லார்க்கும் ஒடுக்கப்படுறவங்க நிலைமை கண்டிப்பா கொஞ்சமாச்சும் புரியும். இத இங்கிலிஷ்ல Empathy_னு சொல்வாங்க. இந்த படத்த பாத்த பிறகும் கூட அந்த Empathy வராம ‘இப்போல்லாம் யாரு சார் இதெல்லாம் பாக்குறா’ அப்டினு சொல்றவங்களுக்கு தோழர் மாரி சொல்ற ஒரே மெசேஜ் ‘திருந்துங்க டா டீ வாங்கி தாரேன்’. படத்த முழுசா பாருங்க திருந்துங்க.

P.S. இந்த படம் ‘அந்த’ விசயத்த பத்தினது தான். ஆனா என் பதிவுல ஒரு வாட்டி கூட நா ‘அந்த’ வார்த்தைய யூஸ் பண்ணல. படத்துலயும் அப்டி தான். அந்த வார்த்தை உங்க காதுல விழாது

– Siva Raman S

தந்தை பெரியாரின் உருவம் போர்த்த வெள்ளிக்காசுகள்

வெள்ளிக்காசு

நமது தமிழ் நூல் மன்றம் சார்பில் தந்தை பெரியாரின் உருவம் போர்த்த வெள்ளிக்காசுகள் தாயாரித்துள்ளோம்.

இப்போ அதற்கென்ன தேவை என்று நீங்கள் கேட்கலாம்.

பெரியார் கொள்கை கொண்டோர், திருமணம், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, எப்போதும் ஒரு கேள்வி நமக்கு முன் வரும், “என்ன பரிசளிப்பது, நூல்களா பணமா அல்லது வேறு ஏதாவது வாங்குவது என்றால் என்ன வாங்குவது?” என்பது தான் அது
நாம் பெரியாரின் நூல்களை கொடுத்தால் இவர்கள் படிப்பார்களா அல்லது பரணில் போட்டுவிடுவார்களா என்று கேள்வி நம் அனைவரின் மனதிலும் ஒரு வினாடி நிச்சயம் நிழலாடும்.

இறைமறுப்பு கொள்கை இல்லாதவர்களுக்கு அந்த பிரச்சனையே கிடையாது, ரூ.500-க்கு ஒரு வெள்ளிக்காசு வாங்கி சென்று பரிசளித்துவிடுவார்கள்,

நமக்கு பிரச்சனை என்னவென்றால், வெள்ளிக்காசுகளில் பெரும்பாலும் லட்சுமி அல்லது சரஸ்வதி உருவம் தான் பொறித்திருக்கும்.

எனவே நமது தோழர்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு தயக்கமின்றி பரிசளிக்கும் விதமாக பெரியாரின் உருவம் பொறித்த வெள்ளி நாணயங்கள் தாயரித்துள்ளோம்.

இதை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கவலையே வேண்டாம், என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பார்ப்பன மாமி ஒருவரின் பேத்தியின் பிறந்தநாள் விழாவுக்கு கடந்த வாரம் சென்ற போது 5 கிராம் வெள்ளி நாணயத்தை பரிசளித்தபோது, “ஆகா இதில் என்ன இருக்கிறது அவரும் ஒரு பெரியவா தானே” என்று சொல்லி மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்

பெரியாரை வேண்டாம் என்று சொல்லுபவரும் கூட வெள்ளியை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.

எதோ ஒரு வழியில் பெரியாரை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சி என்று கூட இதை கொள்ளலாம், ஆனால் நிச்சயம் பூஜையில் வைக்க மாட்டார்கள், நாணயத்தின் பின் புறம் “கடவுளை மற, மனிதனை நினை” என்ற வரிகள் பொரித்துள்ளோம்

ஒரே நேரத்தில் பெரியார் மற்றும் அண்ணல் இருவரின் உருவம் பொறித்த வெள்ளி நாணயங்கள் வெளியிடத்தான் நினைத்தோம்
ஆனால் இந்த நாணயம் தயாரிக்க டை எனப்படும் அச்சு செய்யும் செலவே சுமார் ரூ.50,000/- ஆகிவிட்டது அதனால் அண்ணல் உருவம் பொறித்த வேல்லஈ நானாயம் அடுத்த மாதம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

இந்த நாணயங்கள் 5 மற்றும் 10 கிராம் எடையில் கிடைக்கிறது, நமது தமிழ நூல் மன்ற வலைதளத்தில் பணம் செலுத்தி நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்,

இந்த நாணயங்கள் உங்களுக்கு இன்சுரன்ஸ் செய்யப்பட பதிவு தபாலில் அனுப்பிவைக்கப்படும், எனவே தொலைந்துவிடுமோ என்று அஞ்சவேண்டாம்.

பொதுவாக வெள்ளிப் பொருட்கள் தயாரிக்கும் போது அவற்றில் 92.5% வெள்ளியும் கடினதன்மைக்காக 7.5% வேறு சில உலோகங்களும் கலப்பார்கள்,
ஆனால் நமது நாணயங்கள் தூய்மையான 100% வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ளது

இந்த நாணயங்களின் விலை
5 கிராம் நாணயத்துக்கு – ரூ.300
10 கிராம் நாணயத்துக்கு – ரூ.600
இத்துடன் இன்சுரன்ஸ் செய்யப்பட பதிவு தபால் மற்றும் பேக்கிங் செலவு ரூ.100.

இன்றே பெரியாரின் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வாங்க இந்த சுட்டியை அழுத்தவும் https://bit.ly/2ytLeKb

சென்னை சேர்ந்த நண்பர்கள் “தமிழ் நூல் மன்றம், 52, 5ஆவது தெரு, காசி எஸ்டேட், ஜாபர்கான்பேட்டை, சென்னை – 600 083 ” என்ற முகவரியில் நேரில் வந்து வாங்கி கொண்டால் ரூ.100 தபால் செலவு குறையும.

– Krishnavel T S

மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்- தலைவர்கள் அஞ்சலி…!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தி.மு.க.வில் செல்வாக்குமிக்கவராக இருந்தவர் பரிதி இளம் வழுதி, 58 கடந்த,1996-2001-ம் ஆண்டுகளில் தமிழக சட்டசபை துணை சபாநாயகராகவும், 2006-11-ம் ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அக்கட்சியில்இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 6 முறை தமிழக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இன்று சென்னையில் காலமானார்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்