வி. அக் 24th, 2019

இந்து மதம்

Hinduism – இந்து மதம்

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் நீராடினர்.

குத்தாலத்தில், நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உக்தவேதீஸ்வரர், காளீஸ்வரர், சோழீஸ்வரர், மன்மதீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் மங்கள வாதியங்கள் முழங்க, வீதி உலா வந்து, காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.அங்கு, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வித்துன்மாலி என்ற அரக்கன், சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளிபடைத்த கிரகமாக மாறியதால், சூரியனால், பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது.
இதையடுத்து, சூரிய பகவான் குத்தாலத்தில் தவம் இருந்து, சிவபெருமான் அருள் பெற்றார் என்பதன் ஐதீகமாக, கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

பாதி மாயம் மீதி பிரசாதம்…!

வாமிக்கு நைவேத்யம் செய்யும்போது, ‘இதை மட்டும் இவரே சாப்பிட்டு விட்டால், யாராவது அடுத்து நைவேத்யம் செய்வரா…’ என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே ஒரு கோவிலிலுள்ள நரசிம்மர், அவருக்கு பிடித்த பானக நைவேத்யத்தில், ஒரு பகுதியை குடித்து, மீதியை நமக்கு பிரசாதமாகத் தருகிறார்.
பானக்கால நரசிம்மர் என்ற பெயர் கொண்ட இவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள மங்களகிரியில் கோவில் கொண்டிருக்கிறார்.
நமுச்சி என்ற அசுரன், பிரம்மாவிடம், ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றான்.
இதை பயன்படுத்தி, அவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான். இந்திரன், விஷ்ணுவைச் சரணடையவே, அவர் சக்கரத்தை ஏவினார். கடலில் மூழ்கி, நுரையில் புரண்டு, ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளித்தது.
அது, சீறிப் பாய்ந்து, அசுரனின் தலையை அறுத்தது.
நமுச்சியை வதம் செய்த, விஷ்ணு, உக்கிர சக்தி மாறாமல் நரசிம்ம வடிவத்தில், மங்களகிரியில் தங்கினார். அவரை சாந்தப்படுத்த வெல்லம், எலுமிச்சைச் சாறு கலந்த பானகம் அளிக்கப்பட்டு வருகிறது.
குடம் குடமாக பானகம் குடிப்பவர் என்பதால், இவருக்கு, ‘பானக்கால நரசிம்மர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
நரசிம்மரின் சிலை, அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. இந்த வாயில் நான்கைந்து சட்டி பானகத்தை ஊற்றுவார் , அர்ச்சகர். அப்போது, ‘மடக் மடக்’ என்னும் மிடறல் சத்தம் கேட்கும். குறிப்பிட்ட அளவு குடித்ததும், சத்தம் நின்று விடும்.
பின், பாதியளவு பானகம் நரசிம்மரின் வாயில் இருந்து வெளியேறும். அதை பாத்திரத்தில் பிடித்து பிரசாதமாக தந்து விடுவர். கோவிலிலேயே பானகம், விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கோவிலின் பின்புறம், லட்சுமி தாயார் சன்னிதி உள்ளது. நரசிம்மர் சன்னிதிக்கு வெளியே, ஒரு குகை வாசல் உள்ளது. இதில், விஷ்ணு சிலை இருக்கிறது. இந்த குகை, 9 கி.மீ., துாரம் கொண்டது. உண்டவல்லி என்னும் இடத்திலுள்ள, 25 அடி நீள ரங்கநாதர் சிலையை, இந்த பாதை சென்றடைகிறது. பாதுகாப்பு கருதி, குகை வாசல் மூடப்பட்டுள்ளது.
மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, 11 நிலை கொண்ட, 153 அடி உயர கோபுரம் உள்ளது.
இந்த நரசிம்மர், பாண்டவர்களில் மூத்தவரான, தர்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிந்திருக்கும் இவர், பட்டுபீதாம் பரதாரியாக காட்சி தருகிறார். ராஜ்யலட்சுமி தாயார் இங்கு அருள்கிறாள்.
விஜயவாடா- குண்டூர் சாலையில், 12 கி.மீ., துாரத்திலும், குண்டூரில் இருந்து விஜயவாடா வழியில், 21 கி.மீ., துாரத்திலும் மங்களகிரி பானக்கால நரசிம்மர் கோவில் உள்ளது.
பானக நரசிம்மர் இருக்கும் மலைக்கோவில், காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையிலும், அடிவாரக் கோவில், காலை, 6:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.

நன்றி – தி.செல்லப்பா.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி…!

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி…!

கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு. 
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர். 
வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து விட்டனர். 
ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம். 
பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும், பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள் இருக்க முடியாது. ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின் நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப் பிடிக்கும். அது தான் திருத்தங்கல். 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில், நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள், மகாலட்சுமி. விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம் பெருகும்.
திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது. 

 

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது. வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.
பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமை மிக்கவள். இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர், மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர். ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை காக்கிறாள். இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.
நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான் பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே அதிகம்…’ என்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி, வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு வந்து தவம் புரிந்தாள். பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’ என, ஏற்று அருளினார். 
திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’ என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.
கோவில், தங்கால மலை மீது உள்ளது. பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால், ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார். செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் ஆகியோர் கருவறையில் உள்ளனர். 
சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது. மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி (பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற நான்கு தாயார்கள் உள்ளனர். நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.
விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது. 

நன்றி – திரு தி.செல்லப்பா.

தகவல் – கிராமத்தான் முயாஷா

பதிவு செய்த நாள்:

செவ்வாய் 16 அக்டோபர் 2018.

144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா?: வரலாறு சொல்லும் உண்மை!

சமீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே “ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?” என்று தான் தொடர்கிறார்கள்.

அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ?

இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.

ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம்

தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது. ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.

அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள். கிமு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்

குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 18 அக்டோபர் 1875ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.

1869-74ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 77ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன. 1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.

அதில் 1874ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன. நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.

சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஏன்? உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? ஏன்? இங்கே தான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன. இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள். எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?

தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.

தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.

கார்த்திக் புகழேந்தி, பத்திரிகையாளர்; பதிப்பாளர்.

24 நிமிடத்தில் மோட்சம்!

24 நிமிடத்தில் மோட்சம்!
24 நிமிடத்தில் மோட்சம்!

‘மோட்சம் கிடைக்க வேண்டுமானால்,

                      தவமிருங்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுங்கள், குறைந்த பட்சம், நாம ஜபமாவது செய்யுங்கள்…’

என்று சொல்கின்றனர், மகான்கள். ஆனால்,

வெறும், 24 நிமிடத்தில் மோட்சத்தை  - பிறப்பற்ற நிலையை எளிதில் பெற ஒரு வழி இருக்கிறது. 
வேலுார் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள கடிகாசல மலையிலுள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல வேண்டும். 
கடிகாசலம் என்று இந்த மலைக்கு பெயர் வரக் காரணம் உள்ளது… 
கடிகை என்றால் ஒரு நாழிகை அல்லது 24 நிமிடம். சலம் என்றால் மலை. ஆம்… 24 நிமிடம் இந்த மலையில் அமர்ந்திருந்தாலே போதும், நரசிம்மரின் அருளால் பாவங்கள் நீங்கி, மோட்ச பலனை அடையலாம்.
பிரகலாதனுக்கு, நரசிம்மராக காட்சி கொடுத்தார், பெருமாள். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய

வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள், கடிகை மலையில் தவமிருந்தனர். 
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது… 
விஸ்வாமித்திரர் இத்தலத்தில் ஒரு நாழிகை நேரம், நரசிம்மரை வழிபட்டதன் பயனாக, ‘பிரம்ம ரிஷி’ பட்டம் பெற்றார். அதே போல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் நிச்சயம் என, கருதினர். ஆனால், இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள் தொந்தரவு செய்தனர். தங்களை காக்க, பெருமாளை வேண்டினர், ரிஷிகள்.
ஆஞ்சநேயரை அழைத்து, ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார், பெருமாள். பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கி, அரக்கர்களை வென்று, ரிஷிகளை காப்பாற்றினார், ஆஞ்சநேயர். பின், ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது. 
அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார், பெருமாள். அவர்களது விருப்பப்படி, இத்தலத்தில் யோக நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார், பெருமாள்.
பெருமாள் கோவில்களில் மூலவரும், உற்சவரும் ஒரே சன்னிதியில் தான் இருப்பர். ஆனால், இங்கு மூலவர் யோக நரசிம்மர், 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் இருக்கிறார். இவரைத் தரிசிக்க, 1,305 படிகள் ஏற வேண்டும்.
மலை அடிவாரத்திலிருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள சோளிங்கரில், உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லிக்கு தனித்தனி கோவில் உள்ளது. திருவிழாக்கள் இந்தக் கோவிலில் தான் நடத்தப்படுகிறது.
கடிகை மலை எதிரிலுள்ள சிறிய மலையில், 406 படிகள் ஏறினால், யோக நிலையில் உள்ள ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். இவர், ஜப மாலை, சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். ‘சதுர் புஜ யோக ஆஞ்சநேயர்’ என்ற பெயர் கொண்ட இவரது கண்கள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை பார்த்தபடி உள்ளது. 
பெருமாளின், 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சம். 
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இத்தலத்தில் அன்னதானம் செய்தால், கயாவில் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
புதிதாக வீடு கட்டுபவர்கள், பணிகள் தடையின்றி நிறைவேற, சிறு கற்களை எடுத்து அடுக்கி வைக்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர். 

மலைக்கோவில், காலை 8:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரையிலும், கீழ் கோவில், காலை, 6:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.
வேலுார் – திருத்தணி சாலையில், 60 கி.மீ., துாரத்திலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக, 125 கி.மீ., துாரத்திலும் சோளிங்கர் உள்ளது. 

நன்றி-தி.செல்லப்பா.

தகவல் -கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்