நாட்டார் தெய்வங்கள்
நாட்டார் தெய்வ வழிபாடு என்பது சிறுதெய்வ வழிபாட்டு முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்ற சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்று தந்த முறைப்படியும் நடக்கிறது.
தமிழர்கள் மற்ற சமயங்களை மதிப்பதை மரபாக கொண்டவர்கள். அவர்கள் வழியில் அவர்களின் தெய்வங்களையும் வழிபடுவதில் மறுப்பேதும் இல்லாதவர்கள். அதன் குணங்களாலேயே பிற்காலத்தில் சைவம், வைணவம், பௌத்தம், ஜைனம், இஸ்லாம், கிருத்துவம் போன்ற சமயங்களையும், கடவுள்களையும் தமது வழிபாட்டு முறைகளில் சேர்த்துக்கொண்டனர்.
சிந்து சமவெளி மக்களாகிய தமிழர்கள் நாட்டார் தெய்வங்களையே மதித்துப் போற்றி வழிபட்டு வந்துள்ளனர். தமிழர்களின் நாட்டார் தெய்வங்கள் என்பவை அவர்கள் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ்நாட்டிலும் வடக்கிழங்கையிலும் வாழ்ந்து மடிந்த சக மனித உயிர்கள். நம் மண்ணின் கருணைக்கு, வீரத்திற்கு, அவலத்திற்கு, அறத்திருக்குமான சிறந்த சாட்சிகள் அவர்களே. எனவே நம் மண்ணில் சிலைகளாக, நடுகல்லாக இருக்கிற சாமிகளின் வரலாறை அறிந்து கொள்ளுதல் பாரம்பரிய தேடலில் மிக மிக அவசியமாகிறது.